மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

நடிகர் மன்சூர் அலிகான் தன்னைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு நடிகை த்ரிஷா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மன்சூர் அலிகானுக்கு தமிழ் திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, பெண்களை இழிவுபடுத்தி பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மன்சூர் அலிகான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே அவ்வாறு பேசவில்லை. இது தொடர்பாக நடிகை த்ரிஷா சார்பில் எந்த புகாரும் அளிக்கப்படாத நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் வழக்கு பதிவு செயப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

அப்போது காவல் துறை தரப்பில் மாநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி, “மன்சூர் அலிகானின் பேச்சு குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது” என்று கூறினார். இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

ஆம், அடக்க நினைத்தால் அடங்க மறு. இப்ப சொல்கிறேன் எனை மன்னித்துவிடு. ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி பெற்றுவிட்டேன். எனக்காக வாதிட்ட தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் யாவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். எதிர்த்து என்னை கண்டித்த மானுடர்களுக்கும் பணிவான வணக்கங்கள். கலிங்கத்துப் போர் முடிந்தது. லட்சக்கணக்காணோர் மாண்டு கிடக்க, சாம்ராட் அசோகனின் இதயத்தில் ரத்தம் வடிந்து. அஹிம்சையை தழுவினான். ஆம். மனசாட்சியே இறைவன். காவல் அதிகாரி த்ரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது எனச் சொல்ல, ‘ஐயஹோ எனக்கும் வருத்தம் தான்’ என வந்துவிட்டேன். யதார்த்த நிலை.

சட்டம் வென்று வெளியே வந்தால், மீண்டும் கோரப்பசியுடன் கோழிக் குஞ்சை கவ்வ வரும் வல்லூறுகளாக ஊடகம் துரத்துகிறது!! ஜனநாயகத்தின் நான்காவது தூண்,. மணிப்பூர், ஹாத்ரஸ் பெண் பல்கீஸ் பானு, நீட் அனிதாக்கள், வாச்சாத்தி வன் கொடுமைகள் நித்தம் மதக்கலவர வன்கொடுமைகளை சாட்டையடியாக கேள்வி கேட்க மறுக்கிறது. எனது இளமைக்காலம் யாவும் திரைத்துறையில் இழந்து விட்டேன். திமிங்கலமாக உலா வந்தாலும், பாத்திரங்கள் சிறு மீன்களாகத்தான் அமைந்தது. இனி வரும் நாட்களாவது ஆக்கபூர்வமாக உழைக்க இறைவா சக்தியை கொடு.

என் மக்கள், மலடான பளபளக்கும் ரசாயண உரமேற்றப்பட்ட காய்கறிகளை உண்டு, விவசாயிகள் வீணர்களாக ஆக்கப்பட்டு, விளை நிலங்கள் கரிக்கட்டைகளாக மாறும். கனிமங்கள், மலை, ஆறு காணடிக்கப்பட்டு, வேலையற்றவர்களாய் நிற்கிறோம். குழந்தைகள் கசடறகற்க, சூரியன் மறையும் முன் குடும்பம் காக்க மாங்குமாங்கு என்று உழைப்போம். மாதத்தில் 10 நாள் கடுமையாக உழைத்தால்தான் கரண்ட் பில் கட்ட முடியும். மீதி நாள் GST, ST, டோல்கேட், பெட்ரோல் கேஸ், ஸ்கூல் பீஸ், மளிகை வாங்க என, ஒன்றும் மிஞ்சமாட்டேங்கிறது. இன்னும் கடுமையாக ஏதாவது சம்பளத்துக்கு வேலை செய்தால்தான் நாம் அதானிக்கு கப்பம் கட்ட முடியும்.

பெண்ணிலிருந்து தான் மனிதன் பிறக்கிறான். தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது; தாய்க்கு சேவை செய் என்றார் நபிகளார். பெண்மை புனிதம். காரணத்தோடு தான் ஆண்மையை அழியுங்கள் என்றார் பெரியார். எனை ஈன்ற சபூரா மாள் பாம்புக்கடி, பூரான், தேள் கடித்து வருவோர்க்கு 8 வேளை தொழுது, ஓதி, ஊதி, கிராம்பு நீர் கொடுத்து, நற்கிருபைகள் செய்தவர். சினிமா பார்க்கவிடாது 10-ஆம் வகுப்புவரை வளர்த்தவர். இனிமேலும் இம்மண்ணின் மீட்சிக்கு, சகோதரத்துவத்துடன் உழைக்க அருள் புரிவாய் இறைவா!! இறையச்சமே நம் குழந்தைகளின் நல்வாழ்க்கையை அருளும்!

எனது சக திரைநாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு. இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.