பஞ்சாப் ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வரிக்கு வரி படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் அறிவுறுத்தியுள்ளார்.
பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடர்ந்தது. பஞ்சாப் மாநில சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிறுத்தி வைத்ததை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டது. பஞ்சாப் மாநில அரசின் ஆளுநருக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. இந்த விசாரணையின் போது, பஞ்சாப் மாநில ஆளுநர் நெருப்புடன் விளையாடுவதைப் போல விளையாடுகிறார் என கடும் கண்டனம் தெரிவித்தது உச்சநீதிமன்றம். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்திருக்கிறது.
பஞ்சாப் ஆளுநருக்கு எதிரான பஞ்சாப் மாநில அரசின் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த முக்கிய அம்சங்கள்:- அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ் மாநில சட்டசபை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவில்லை எனில் மறுபரிசீலனை செய்ய சட்டசபைக்கு திருப்பி அனுப்ப வேண்டும். – திருப்பி அனுப்பிய மசோதா, சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டால் அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். – ஆளுநர் பதவி என்பது ஒரு அடையாள பதவி; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்தின் தலைவர் அல்ல; மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அரசின் பிரதிநிதி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, அமைச்சரவையின் முடிவுகளின்படிதான் ஆளுநர் என்பவர் செயல்பட வேண்டும் – சட்டசபை நடவடிக்கைகளை முடக்கும் வகையில் மசோதாக்களுக்கு ஒப்புதல் தரும் விவகாரத்தில் ஆளுநர் செயல்படக் கூடாது – ஜனநாயக நடைமுறைகளில் உண்மையான அதிகாரம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் இருக்கிறது; ஆளுநருக்கு இல்லை இவ்வாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்தப் பின்னணியில் முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் இன்று தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-
பஞ்சாப் ஆளுநருக்கு எதிரான வழக்கில் ஆளுநருக்கான அதிகாரங்கள் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது அனைத்து மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் ஒவ்வொரு வரியையும் கண்டிப்பாக படிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு புரியவில்லை என்றால் மூத்த வழக்கறிஞர் ஒருவரின் உதவியுடன் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.