அமலாக்கத்துறை விசாரணைக்கு வரவிடாமல் தடுக்க திமுக அரசு முயற்சிப்பது ஏன்?: அண்ணாமலை!

ஐஏஎஸ் அதிகாரிகளை அமலாக்கத்துறை விசாரணைக்கு வரவிடாமல் தடுக்க திமுக அரசு முயற்சிப்பது ஏன்? ஊழலை அமலாக்கத்துறை விசாரணை அம்பலப்படுத்திவிடும் என்று திமுக அரசு பயப்படுகிறதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் அண்ணாமலை.

தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதைதொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி ஒரே நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த தொழிலதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், ரத்தினத்தின் உறவினர் கோவிந்தன், மணல் குவாரி அதிபர் கரிகாலன் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியற்றிய ஓய்வுபெற்ற பொறியாளர் திலகம், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் எழிலகத்தில் உள்ள நீர்வளத்துறை அலுவலகம் என பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த அதிரடி சோதனையில், முக்கிய ஆவணங்கள், ரொக்கப் பணம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து 10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. இந்த சம்மனைத் தொடர்ந்து நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சில முக்கிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகியிருந்தார்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிமவள சட்டம் சேர்க்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை என்றும், மாநில அரசு அதிகாரிகளை துன்புறுத்தும் நோக்கிலும், அரசு நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கிலும் அமலாக்கத் துறை செயல்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், 10 மாவட்ட கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளதை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, “மறைப்பதற்கு நிறைய உள்ளவர்கள் பீதி அடையவும் பல காரணங்கள் உள்ளன. ஊழலில் திளைக்கும் தி.மு.க அரசின் இந்த அயோக்கியத்தனமான நடவடிக்கை, நமது மாநிலத்தின் வளங்களை சுரண்டுவதற்காக திமுக உருவாக்கிய ஆழமான அழுகலைத்தான் உணர்த்துகிறது. மணல் சுரங்கப் பண மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை விசாரணைக்கு வரவிடாமல் தடுக்க திமுக அரசு முயற்சிப்பது ஏன்? தனிப்பட்ட ஆதாயங்களுக்காக அவர்கள் வேண்டுமென்றே உருவாக்கிய நஷ்டத்தை, அமலாக்கத்துறை விசாரணை அம்பலப்படுத்திவிடும் என்று ஊழல் திமுக அரசு பயப்படுகிறதா?” என கேள்வி எழுப்பியுள்ளார் அண்ணாமலை.