தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான ‘மாமனிதன்’ விமர்சகர்களிடையே நல்ல பெயரைப் பெற்றது. அடுத்ததாகக் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ என்கிற பெயரில் புதிய படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், சீனு ராமசாமி நடிகை மனிஷா யாதவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என பத்திரிகையாளர் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார். இது சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, அப்பத்திரிகையாளர், “சீனு ராமசாமியின் இடம் பொருள் ஏவல் படத்தில் நடிகை மனிஷா யாதவ்தான் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். கொடைக்கானலில் படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது சீனு ராமசாமி தினமும் மனிஷா யாதவுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்து படுக்கையறைக்கு அழைத்திருக்கிறார். இதனால், ஒருகட்டத்தில் தொல்லை தாங்க முடியாமல் அப்படத்திலிருந்து மனிஷா விலகிக்கொண்டார். அதன்பின், வேறு ஒரு நாயகி அப்படத்தில் இணைந்தார். இந்த சம்பவத்துக்குப் பின் மனிஷா சினிமாவிலிருந்து விலகிக்கொண்டார்” என விளக்கமான விடியோ ஒன்றை வெளியிட்டார். இது மேலும், சர்ச்சைகளைக் கிளப்பியது.
இதற்கிடையே, சீனு ராமசாமி தன்மீது சிலர் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள் என்பதுபோல் எழுதி பதிவிட்டு, ‘ஒரு குப்பைக் கதை’ இசை வெளியீட்டு விழாவில் தனக்கு மனிஷா நன்றி கூறிய விடியோவைப் பகிர்ந்து ‘என்னால்தான் மனிஷா சினிமாவைவிட்டு போனதாகக் கூறுகிறார்கள். இவர் கடந்த 10 ஆண்டுகளாக நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். இனிமேல், என் படத்திலும் நடிப்பார்’ எனக் குறிப்பிட்டார்.
இந்நிலையில் மனிஷா யாதவ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஒரு குப்பைக் கதை படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சீனு ராமசாமி வந்தபோது மேடையிலிருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது போன்று அவருக்கும் தெரிவித்தேன். 9 ஆண்டுகளுக்கு முன்னால் அவர் குறித்து கூறிய கருத்துகளில் எந்த மாற்றமும் இல்லை. என்னிடம் அநாகரீகமாக நடந்து கொண்டவரிடம் இணைந்து நடிக்க என்ன தேவை இருக்கிறது? சீனு ராமசாமி சார் நீங்கள் உண்மையைப் பேச வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிஷா யாதவ் வழக்கு எண் 18/9 படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து, ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘ஒரு குப்பைக் கதை’ போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.