பெரியாரின் வாரிசு, சமூக நீதிக் கொள்கை, என்று முதலமைச்சர் வசனம் பேசினால் மட்டும் போதாது என்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் என்ன பிரச்சனை? எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வினவியுள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வலியுறுத்தியும், தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்திட கோரியும் உயர்நீதிமன்ற நுழைவுவாயில் முன்பாக தமிழ் வழக்கறிஞர் செயற்பாட்டு குழு சார்பில் தொடர் முழக்க கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று முழக்கம் எழுப்பிய அன்புமணி அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:-
2006ல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞர் உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் என்ற சட்டமன்றத்தில் தீர்மானத்தை கொண்டு வந்தார். ஆனால் அப்போது மத்திய சட்ட அமைச்சர் செய்த சூழ்ச்சியின் காரணமாக அது நிறைவேறவில்லை. உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலத்தை தவிர்த்து மாநில மொழியை வழக்காடு மொழியாக கொண்டு வரலாம் என்றும், அதற்கு குடியரசுத் தலைவருக்கு உரிமை உள்ளது என அரசியல் அமைப்புச் சட்டம் சொல்கிறது. மத்தியபிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்தி தான் அலுவல் மொழி என்று அறிவித்தார்கள். அது போன்று ஏன் தமிழ்நாட்டில் அறிவிக்கவில்லை.
அரசியல் சாசன சட்டத்தில் 348 வது பிரிவு 2ல் உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியை மாற்ற குடியரசு தலைவருக்கு அதிகாரம் இருக்கிறது. இரண்டாவது முறையாக கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா தமிழை வழக்காடு மொழியாக மாற்ற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால் அதன் பிறகு முன்னேற்றம் காணவில்லை. தற்போது நல்ல சூழல் இருக்கிறது. தற்போதைய முதலமைச்சர் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அழுத்தம் கொடுக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இந்த நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய மாநில அரசுகள் ஆதரவளிக்க வேண்டும். இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவிப்பார்கள்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியது தவறானது. மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம். ஆனால் அதற்கான மனது தான் இல்லை. அரசு சென்செக்ஸ் மற்றும் சர்வே என்பதுக்கான வித்தியாசத்தை தெரிந்து கொள்ள வேண்டும், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் எந்த ஒரு தடையும் விதிக்கவில்லை. பீகாரில் நல்ல முறையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர், பெரியாரின் வாரிசு சமூக நீதிக் கொள்கை என்று வசனம் பேசினால் போதாது. பல்வேறு மாநிலங்களில் சாதி வரி கணக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள், தமிழ்நாட்டில் எடுப்பதற்கு உங்களுக்கு என்ன பிரச்சனை உள்ளது. இதுதான் சமூக நீதிக்கான அடித்தளம். சமூக நீதிக்கு கணக்கு எடுக்க முடியாதவர்கள், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு எத்தனை பறவைகள் வருகிறது என்றும், தெருக்களில் எத்தனை மாடுகள் சுற்றி தெரிகிறது என்றும், மற்றும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை தர அதற்கான கணக்கெடுப்பு நடத்த முடிந்த உங்களால் ஏன் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடியவில்லை. இவ்வாறு அன்புமணி கூறினார்.