இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறி உள்ளதா என விவாதிக்க வேண்டிய நேரம் இது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் ஏற்று கொள்ளப்பட்டதை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 26-ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு தினம் (இந்திய அரசியல் சாசன தினம்) கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1949-ல் நவம்பர் 26-ம் தேதி இந்திய அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்டது. இது ஜனவரி 26, 1950 அன்று முதல் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அரசமைப்பு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது. மிகுந்த அழுத்தங்களுக்கு இடையே அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறி உள்ளதா என்பது குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் இது. நீதிமன்றங்களில் மட்டும் இல்லாமல் சட்டப் பல்கலைக்கழகங்களிலும் அரசமைப்புச் சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும்” எனப் பேசியுள்ளார் தமிழக ஆளுநர் ரவி.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதால் தமிழக அரசு ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது. இதற்கிடையே, பஞ்சாப் ஆளுநருக்கு எதிராக அம்மாநில அரசு தொடர்ந்த வழக்கில் அண்மையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்தது. அப்போது, “மாநிலத்தின் ஆளுநராக அரசியலமைப்பில் சில அதிகாரங்கள் இருந்தாலும், அவற்றைக் கொண்டு சட்டமன்றத்தின் அதிகாரத்தை முறியடிக்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கே உண்மையான அதிகாரம் இருக்கிறது” என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்படாத தலைவர் ஆளுநர் என்ற முறையில் மசோதாவை வெறுமனே நிறுத்திவைப்பது, முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் செயல்பாட்டை ஆளுநர் வீட்டோ செய்வதாக அமையும். அத்தகைய நடவடிக்கையானது, நாடாளுமன்ற ஆட்சிமுறையின் அடிப்படையில் அரசியலமைப்பு ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணானது” என தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பில் குறிப்பிட்டது.

ஆளுநருக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 200 வழங்கும் அதிகாரங்களைச் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கி இருந்த நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தையே கேள்விக்கு உட்படுத்தும் வகையில் ஆளுநர் ரவி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.