’நெஞ்சுக்குள் நீதி’ படல் எடுத்தால் மட்டும் போதாது. ’நெஞ்சுக்குள் நீதி’யும் இருக்க வேண்டும்; இரக்கமும் இருக்க வேண்டும்; அவை நிஜமாகவும் இருக்க வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து புதிய தமிழகம் கட்சி நிறுவனர்- தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
திருநெல்வேலி மாவட்டம், பாளை – நாங்குநேரி அருகே அடைமிதிப்பான் குளம் எனும் கிராமத்தில் சட்டவிரோதமாக நடைபெற்றுவந்த கல்குவாரி விபத்தில் நான்கு பேர் மரணம் எய்தினர்; 2 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டனர். கடந்த இரண்டு வருடங்களாக அனுமதியின்றி நடைபெற்று வந்த கல்குவாரியில் அனுமதி மறுக்கப்பட்ட வெடிமருந்துகளைப் பயன்படுத்தியே பாறைகள் தகர்க்கப்பட்டு வந்துள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையிலும், தினமும் அக்குவாரியிலிருந்து நூற்றுக்கணக்கான லாரிகளில் கற்கள் கடத்தப்பட்டுள்ளன. அங்குப் பணிபுரிந்த ஹிட்டாச்சி மற்றும் லாரி ஓட்டுநர்கள் பெரும்பாலும் மிக மிக ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் எவரும் தொழிலாளர் நலச் சட்டத்தின்கீழும், இஎஸ்ஐ, பிஎஃப் உட்பட எவ்வித அமைப்பின் கீழும் பதிவு செய்யப்படவில்லை.
கல்குவாரிகளில் பாறைகளை உடைப்பதற்கு கம்பரசர் இயந்திரங்களைப் பயன்படுத்தி 2 அங்குலம் விட்டமுள்ள துளையிட்டு அனுமதிக்கப்பட்ட வெடிமருந்துகளை மட்டுமே பயன்படுத்தி வெடிக்க வைக்க வேண்டும் என்பதே விதி. ஆனால், விபத்து ஏற்பட்ட சேம்பர் செல்வராஜ் என்பவருடைய கல்குவாரியில் போர் இயந்திரம் மூலமாக 8 முதல் 9 அங்குலம் விட்டமுள்ள துளைகளை இட்டு, தடைசெய்யப்பட்ட அதிநவீன வெடிமருந்துகளைப் பயன்படுத்தி, பாறைகளை உடைத்து இருக்கிறார்கள். பல மீட்டர் தூரத்திற்கு பாறைகளை விரிவடையச் செய்யும் சக்தி படைத்த வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அதனால் அங்கு தொழிலாளர்கள் எப்பொழுதும் ஆபத்தான சூழலியே பணி புரிந்து இருக்கிறார்கள்; சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிராம வீடுகளில் அதிர்வுகள் ஏற்பட்டு பழுதடைந்துள்ளன. மேலும் அபரிவிதமான தூசு ஆகிய பாதிப்புகளுக்கு ஆளான மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கூட முறையிட விடாமல் தடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் பொருளாதார மற்றும் சமூக பலகீனத்தைப் பயன்படுத்திக்கொண்டு கடந்த 10 தினங்களுக்கு மேலாக ஆளும் கட்சியினர் அரசியல் செல்வாக்கு மிக்க குவாரி உரிமையாளர்களைக் காப்பாற்றுவதற்காக அம்மக்களை அலைக்கழித்து இருக்கிறார்கள். குடும்பத்தில் முக்கியமானவர்கள் மரணம் எய்தியதால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும்; ஒரு கோடி ரூபாய் நட்டஈடும் தான் கேட்டார்கள். ஆனால் இந்த அரசு அதற்குக் கூடச் செவி சாய்க்கவில்லை. ’நெஞ்சுக்குள் நீதி’ படல் எடுத்தால் மட்டும் போதாது. ’நெஞ்சுக்குள் நீதி’யும் இருக்க வேண்டும்; இரக்கமும் இருக்க வேண்டும்; அவை நிஜமாகவும் இருக்க வேண்டும்.
எவ்விதமான பாதுகாப்பு வசதிகளும் மேற்கொள்ளப்படாமல் லாபம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டும் செயல்பட்ட காரணத்தினாலேயே இந்தக் கொடிய விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டியது குவாரி உரிமையாளர்களும், இரண்டு ஆண்டுகளாக சட்டவிரோதமாக நடைபெற்று வந்த அந்தக் கல்குவாரிக்கு ’நடைச் சீட்டு’ கொடுத்து, கண்டும் காணாமல் இருந்த அதிகாரிகளும் தான். இவ்வளவு பெரிய விபத்து நடந்த பிறகும் கூட அவர்களுடைய மரணத்திற்குக் காரணமான அந்த உரிமையாளர்கள்மீது 302 மற்றும் வெடிமருந்து விதிமீறல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, ஒரு சிறு துரும்பு நிகழ்ச்சியைக் கூட ’தூணைப் போலப் பெரிதாக்கி’ அதற்கு கண், காது, மூக்கு வைத்து தற்கொலைகளைக் கூட தியாகங்களாக்கி அரசியல் செய்த திராவிட ஆட்சியாளர்களுக்குத் தினக்கூலி வெறும் ரூ 300-க்கு வேலைக்குச் சென்ற ஏழை, எளிய மக்களின் நான்கு உயிர்கள்மீது மதிப்பும் இல்லை; மரியாதையும் இல்லை; அக்கறையும் இல்லை; அனுதாபமும் இல்லை. ஆனால், வெற்று சமூகநீதி பேசி மக்களை ஏமாற்றுகிறார்கள். சமத்துவம் என்பது வெற்று வார்த்தைதானா?
எப்படியாவது ’ஆசை வார்த்தைகளைக் கூறி, ஏமாற்றி அந்த நான்கு பிரேதங்களையும் அவர்களிடத்தில் ஒப்படைத்து விட்டால் போதும்’ என்ற அடிப்படையில் எந்த அளவிற்கு தரம் தாழ்ந்து போக முடியுமோ? அந்த அளவிற்கு அந்த பகுதியில் உள்ள ’பெரும்பாலான மக்களைத் தொடர்ந்து போராடாமல் தடுக்கும் வகையில் அப்பகுதி சங்க பிரமுகர்களை ஊழல் படுத்தி, அவர்களை மது மயக்கத்திலே வைக்க வேண்டும்’ என்ற அடிப்படையில் கடந்த 10 நாட்களாகச் செயல்பட்டு வருகின்றனர். ’தான் ஆடாவிட்டாலும், தன் தசை ஆடும்’ என்பதற்கு இணங்க, மரணமெய்தியவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதைக் காட்டிலும், அவர்களுடைய மரணத்திற்குக் காரணமான குவாரி உரிமையாளர்களைப் பாதுகாப்பதில் மட்டுமே இந்த நிமிடம்வரை இவ்வரசு பெரும் முனைப்புக் காட்டி வருகிறது.
அனுமதியின்றி செயல்பட்ட குவாரியில் நடைபெற்ற 4 மரணங்கள் பயங்கரமான படுகொலைக்குச் சமம். எனவே, தொழிலாளர்களுடைய மரணத்திற்கு காரணமான அந்த குவாரி உரிமையாளர்கள் மற்றும் உடந்தையாக இருந்த அதிகாரிகள் ஆகியோர் மீது கொலைக் குற்றம், வெடி மருந்து பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்து, கைது செய்து நியாயம் வழங்கிட வேண்டும்.
அரசு அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் திட்டமிட்டு இந்த வழக்கை நீர்த்துப்போகச் செய்யக்கூடிய வகையில் மிக எளிதான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கும் எண்ணத்தோடு செயல்படாமல் அவர்களை தண்டிக்கக் கூடிய வகையில் கடுமையான 302 கொலை வழக்கு, Explosive வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்
அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக கற்களை வெட்டி எடுக்கப்பட்ட குவாரி உரிமையாளர்களின் சொத்துக்களை முடக்க வலியுறுத்தியும்; திருநெல்வேலி கல்குவாரி விபத்தில் மரணம் எய்திய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூபாய் ஒரு கோடியும் நட்ட ஈடாக வழங்க வலியுறுத்தியும்; குவாரி உரிமையாளர்மீது 302 வழக்கும், explosive வழக்கும் பதிவு செய்ய வலியுறுத்தியும் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வரும் 01.06.2022 புதன்கிழமை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அந்தந்த மாவட்டச் செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.