காமராசர் பல்கலைக்கழக நிதி நெருக்கடிக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும்: அன்புமணி

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நிலவும் கடுமையான நிதிநெருக்கடிக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து வெளியிட்டுருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நிலவும் கடுமையான நிதிநெருக்கடி காரணமாக அங்கு பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம், அவர்களின் வாழ்விணையர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் ஆகியவை உரிய காலத்தில் வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கல்வி வளர்ச்சியையே நோக்கமாக கொண்ட காமராசரால் உருவாக்கப்பட்டு, பின்னாளில் அவரது பெயர் சூட்டப்பட்ட பல்கலைக்கழகத்தில் சேவை செய்து ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய காலத்தில் ஓய்வூதியம் வழங்கப்படாமல் இருப்பதை நியாயப்படுத்த முடியாது.

ஓய்வூதியம் உரிய காலத்தில் கிடைக்காததால் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் பல நேரங்களில் தங்களுக்கான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளவும், மருந்து, மாத்திரைகளை வாங்கவும் கூட பணம் இல்லாமல் தவிப்பதாக அவர்கள் தெரிவிக்கும் செய்திகள் கவலையை ஏற்படுத்துகின்றன. காமராசர் பல்கலைக்கழகத்திற்கு 35 ஆண்டுகளாக உழைத்தவர்களுக்கு, உரிய காலத்தில் ஓய்வூதியம் வழங்குவதுதான் அவர்களுக்கு செய்யப்படும் நன்றிக்கடன்.

காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் என மொத்தம் 400க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் என சுமார் 1000 பேர் உள்ளனர். அவர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க மாதம் ரூ.10.50 கோடி தேவைப்படும் நிலையில், அதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தால் ஏற்பாடு செய்ய முடியாதது தான் இந்த நிலைக்கு காரணம். பல்கலைக்கழகத்தின் அவசரத் தேவைகளுக்காக வைக்கப்பட்டிருந்த மூலதன நிதி ரூ.300 கோடி ஏற்கனவே செலவு செய்யப்பட்டு விட்ட நிலையில், பல்கலைக்கழக நிதி ஆதாரங்கள் அனைத்தும் வறண்டு விட்டன. அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் கடந்த காலங்களில் நிதியை கையாண்ட முறைகள் குறித்து ஆய்வு செய்த தணிக்கை அமைப்புகள், ஒட்டுமொத்தமாக 5 தணிக்கை ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளன. அவற்றுக்கு பல்கலைக்கழகம் சரியான விளக்கம் அளிக்காததால் அரசு நிதி அளிக்கவில்லை. இதே நிலை தொடரக்கூடாது. மதுரை காமராசர் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனைக் கருத்தில் கொண்டு, பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தேவையான அளவு நிதியை ஒதுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.