பாஜகவுடன் இனி எக்காலத்திலும் கூட்டணி கிடையாது: ஜெயக்குமார்

பாஜகவுடன் இனி எக்காலத்திலும் கூட்டணி கிடையாது எனவும் வரும் நாடாளுமன்ற தேர்தலோடு திமுகவின் கதை முடிந்தது என்ற வரலாற்றை தமிழக மக்கள் எழுதுவார்கள் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு சமூக நீதி காத்த வீராங்கனை என்று ஜெயலலிதாவை சொன்னால் அது மிகையாகாது. இட ஒதுக்கீட்டில் ஒரு இமாலய சாதனையை கொடுத்தது மட்டும் அல்லாமல் கட்சியிலும் ஆட்சியிலும் கூட ஆதி திராவிடர்களுக்கு, பழங்குடியினர்களுக்கு, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு, மிகவும் பின்தங்கியவர்களுக்கு இப்படி எல்லாவித சலுகைகளையும் அளித்து ஒரு சமூக நீதிக்கான அரசு, சமூக நீதிக்கான கட்சி அதிமுக என உறுதிபட உணர்த்தினார். ஆனால் குறிப்பாக சொல்ல வேண்டும் என்று சொன்னால் ஒரு பொது தொகுதியில் ஆதி திராவிட சமுதாயத்தை சேர்ந்தவர்களை யாரும் நிறுத்தியதில்லை. ஆனால் ஜெயலலிதா தான் தலித் எழில்மலை அவர்களை பொது தொகுதியில் நிற்க வைத்தார்கள். இப்படி சமூக நீதியை நிலைநாட்டியவர் ஜெயலலிதா. ஆனால் இன்றைக்கு சமூக நீதியை பற்றி வாய் கிளிய பேசும் மு.க ஸ்டாலின் ஒன்றை மறந்துவிட்டார். வேங்கை வயல் சம்பவம் நடந்து 180 நாள் ஆகிறது. இன்னும் அதன் துர்நாற்றம் போகவில்லை. ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகராக இருந்த காவல்துறை இன்றைக்கு மு.க ஸ்டாலின் ஆட்சியில் உண்மையை கண்டுபிடிக்காமல் தத்தளிக்கிறார்கள்.

இன்று மு.க ஸ்டாலினின் பட்டத்து இளவரசருக்கு சாரை சாரையாக வாழ்த்து தெரிவித்துக்கொண்டு இருக்கிறாங்க.. கனிமொழியை கட்சி தலைவராக ஆக்கலாமே.. கனிமொழிக்கு பெரிய அளவில் பொறுப்புகள் கொடுக்கலாமே.. ஏன் அவர்களுக்கு அந்த அங்கீகாரம் கொடுக்கவில்லை. குடும்பத்திலேயே அங்கீராரம் கிடையாது. குடும்பத்திலேயே பெண்களுக்கு சமத்துவம் கிடையாது. சமூக நீதியை குழி தோண்டி புதைத்துவிட்டு இப்போது சமூக நீதிக்கு ஒரு குழுவாம். ஏற்கனவே நிதியை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு குழுக்களை போட்டிருக்கிறார்கள். இன்னைக்கு அந்த குழுக்களே எங்க இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

ஆட்சி பொறுப்புக்கு வந்த உடனேயே உலகத்தில் உள்ள எக்னாமிஸிஸ்ட்களை எல்லாம் கொண்டு வந்து நிதி நிலைமையை எல்லாம் அதிகரித்துவிடுவோம் என்றும் எல்லாருக்கும் எல்லாம் சேர்ந்துவிடும் என்றும் பேசினார்கள். என்ன அறிக்கையினை அந்த குழு கொடுத்துள்ளது. இவ்வளவும் கொண்டு வந்து எதற்காக? அப்போது சொத்து வரியை அதிகரிக்க வேண்டிய அவசியம் என்ன? வீட்டு வரியை அதிகரிக்க வேண்டிய அவசியம் என்ன? பால்விலையை உயர்த்த வேண்டிய அவசியம் என்ன? எல்லா விலைவாசியும் உயர்ந்ததனால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இது எல்லாம் இந்த விடியா அரசுக்கு தெரியவில்லை. கல்விக்கடனை ரத்து செய்வேன் என்று சொன்னீங்க.. ஆனால் இதுவரை செய்யவில்லை. விவசாயிகள் போராடினால் அவர்கள் மீது குண்டாஸ். சட்ட ஒழுங்கு மோசம். இப்படி எல்லா வகையிலும் மக்கள் கஷ்டப்படும் நிலையில், இதற்கு மட்டும் பணம் எங்கிருந்து வருகிறது. அவர்களுடைய அப்பாவுக்கு விழா நடத்த வேண்டும் என்றால் கோடிக்கணக்கில் செலவு செய்யலாம். அவர்களுடைய அப்பாவின் புகழை பாட மக்கள் வரிப்பணத்தை எடுத்து செலவு செய்யலாம். உலகத்திலேயே இந்த மாதிரி அநியாயம் எங்கும் நடக்காது.

அதாவது கேட்பதற்கு ஆள் இல்லை. நாம் வைத்தது தான் சட்டம் என்று சொன்னால்.. “வலிமை உள்ளவர்கள் எல்லாம் வைத்தது சட்டம் ஆகாது தம்பி” என்ற எம்ஜிஆர் பாடியது போல நீங்கள் வைத்தது எல்லாம் சட்டமில்லை என்பதனை 2024-இல் இதற்கு தகுந்த பதிலடி கொடுத்து, இந்த நாடாளுமன்ற தேர்தலோடு திமுகவின் கதை முடிந்தது என்ற வரலாற்றை தமிழக மக்கள் எழுதுவார்கள்.

பாஜகவுடன் இனி எக்காரணம் கொண்டும் கூட்டணி கிடையாது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் ஒவ்வொரு கட்சிகளும் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும். இவ்வாறு அவர் கூறினார்.