சென்னையில் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் சூழ்ந்துள்ள வெள்ள நீரை அகற்ற அமைச்சர்கள், அதிகாரிகள் மழையையும் பொருட்படுத்தாமல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஆய்வுக் கூட்டம் நடத்தி அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்ததோடு, தொடர்ந்து மழை மீட்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறார். எனினும், சென்னையில் ஒரு நாள் மழை பெய்ததற்கே வெள்ளம் சூழ்ந்துவிட்டதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகள், உடனே வெள்ள பாதிப்புகளை சரி செய்ய கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டும், சாலையில் மழைநீர் தேங்குவது தொடர் கதையாக இருப்பதாகவும் திமுக அரசின் நடவடிக்கை ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதைப் போல் அமைந்துள்ளதாகவும் விமர்சித்தார்.

மழை பெய்யாத நிலையிலும் சென்னையின் தி.நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆவடி, அம்பத்தூர், கொரட்டூர் போன்ற பகுதிகளில் சாலைகளில் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கி உள்ளது எனவும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதாகவும், குடிநீருடன் கழிவுநீர் கலந்துவிட்டதாகவும், குடிப்பதற்கு தண்ணீர் இல்லை என்ற நிலைமை ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பெரும்பாலான பேருந்து நிலையங்கள் நீரில் மிதக்கின்றன என்ற அவர், “இதன் காரணமாக பொதுமக்கள் பெருத்த அவதிக்கு ஆளாகியுள்ளனர். நேற்றைய மழைக்கு இரு சக்கர வாகனங்களை தள்ளிக் கொண்டு செல்லும் நிலைக்கு வாகன ஓட்டிகள் ஆளாகினர். பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன” என்று விவரித்தார்.

இந்த மழைக்கே இந்த நிலைமை என்றால், ‘மிக்ஜாம்’ புயல் சென்னையை கடக்கும்போது நிலைமை எப்படி இருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே தற்போது எழுந்துள்ளதாகவும் கூறிய ஓபிஎஸ், இதிலிருந்து, திமுக அரசால் மழைநீர் வடிகால் பணிகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது என விமர்சித்தார். சென்னைக்கு குடிநீர் அளிக்கும் ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் அவற்றிலிருந்து நீர் திறக்கப்படுவதும், வருங்காலங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதும் நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும் என்றும் சுட்டிக்காட்டினார்.

உண்மை நிலவரத்தை கண்டறிந்து, யதார்த்த நிலையை கேட்டறிந்து, எந்தெந்த சாலைகளில் எல்லாம் மழைநீர் தேங்கி இருக்கிறதோ அங்கெல்லாம் போர்க்கால அடிப்படையில் நீரினை அகற்றவும், மீண்டும் மின்சார இணைப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.