திண்டுக்கல் டாக்டரிடம் ரூ20 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது!

திண்டுக்கல்லில் டாக்டர் ஒருவரிடம் வழக்கை முடித்து தருவதாக கூறி ரூ20 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவரை லஞ்ச ஒழிப்புப் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இந்நாள் முன்னாள் அமைச்சர்கள், தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள் வீடுகள், அலுவலகங்களில் பல்வேறு வழக்குகளின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்தினர். இதேபோல திண்டுக்கல் மாவட்டத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொழிலதிபர் ரத்தினம் உள்ளிட்டோர் வீடுகளில் அடுத்தடுத்து சோதனை நடத்தி இருந்தனர். தற்போது மணல் விவகாரத்தில் தொழிலதிபர் ரத்தினம் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் என்ற பெயரில் தொழிலதிபர்கள் உள்ளிட்டோரை மிரட்டி பணம் பறிப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திண்டுக்கல்லைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தம்மிடம் பணம் பறித்த அமலாக்கத்துறை அதிகாரி குறித்தும் தகவல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திண்டுக்கல்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனை நடத்திய போது சந்தேகத்துக்கு உரிய நபர் ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அந்த நபரின் வாகனத்தை சோதனையிட்ட போது கட்டுக்கட்டாக ரூ20 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தினர் போலீசார். இந்த விசாரணையில்தான் திண்டுக்கல் டாக்டர் புகார் கொடுத்த அமலாக்கத்துறை அங்கித் திவாரிதான் சிக்கியவர் என தெரியவந்தது.

திண்டுக்கல்லை சேர்ந்த அந்த டாக்டர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை முடித்து வைப்பதற்காக டாக்டரிடம் ரூ20 லட்சம் பெற்றதாகவும் கையும் களவுமாக சிக்கிய அங்கித் திவாரி ஒப்புக் கொண்டிருக்கிறார். இதனையடுத்து அவரது காரில் இருந்த ரூ20 லட்சம் லஞ்சப் பணத்துடன் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி அதிரடியாக கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் யார் யாரிடம் மிரட்டி லஞ்சம் பெறப்பட்டது என்பது குறித்தும் அங்கித் திவாரியிடம் லஞ்ச ஒழிப்புப் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.