இன்னும் 9,760 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வரவில்லை: ரிசர்வ் வங்கி!

இன்னும் ரூ.9760 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்படவில்லை அல்லது மாற்றப்படவில்லை என்று மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பரில் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதனிடையே, புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுக்களை கடந்த மே 19ஆம் தேதி திடீரென திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. 2023 செப்டம்பர் 30-க்கு பிறகு ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்றும், அந்த நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்குமாறும் அறிவிப்பை வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவும் அல்லது மாற்றவும் ரிசர்வ் வங்கி அனுமதித்தது.

இந்த நிலையில், மத்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏறத்தாழ 97.26 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பி விட்டதாகவும் இன்னும் 9,760 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் மட்டுமே மக்களிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்ப பெறுவதாக ஆர்பிஐ வங்கி மே, 19 அன்று அறிவித்தது. 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்ட மே 19, 2023 அன்று வணிகம் முடிவடையும் போது ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்தன. இந்த நோட்டுகள் திரும்ப பெறுவதாக அறிவித்த பிறகு நவம்பர் 30ஆம் தேதியின் முடிவில் 9,760 கோடி ரூபாய்க்கான நோட்டுகள் மக்களிடம் மீதம் உள்ளன. மே 19, 2023 அன்று புழக்கத்தில் இருந்த ரூ. 2000 ரூபாய் நோட்டுகளில் 97.26 சதவீதம் திரும்பி வந்துவிட்டன” என மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.