விஜய்குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
‘உறியடி’ திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற விஜய் குமார் நடித்துள்ள புதிய படம் ‘ஃபைட் கிளப்’. இந்தப் படத்தை அப்பாஸ் ரஹ்மத் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கார்த்திகேயன் சந்தானம், ஷங்கர் தாஸ் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளனர். ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் ஆதித்யா படத்தை தயாரித்துள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தை வெளியிடுகிறார். படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
“நான் பொறக்குறதுக்கு முன்னாடி பொறந்த சண்ட இது. யார் செத்தாலும் இந்த சண்ட சாவாது” என்ற விஜய்குமாரின் குரலில் டீசர் தொடங்குகிறது. சேஸிங், சண்டை என விறுவிறுப்பாக நகரும் டீசரில் கோவிந்த் வசந்தாவின் அட்டகாசமான பின்னணி இசை ஈர்க்கிறது. அதற்கு தகுந்த கிருபாகரனின் கட்ஸ் பக்காவாக பொருந்தி மொத்த டீசரையும் ரசிக்க வைக்கிறது.
பிஜிஎம் ஏறி, ஓரிடத்தில் இறங்கி, மீண்டும் ஹைப் ஏறுவது ரசனை. லியோன் பிரிட்டோவின் ப்ரேம்கள் மொத்த படத்துக்குமான ஒரு சோறு பதம். நல்ல மேக்கிங் டீசரில் வெளிப்படுகிறது. முழுக்க சண்டை என்பதால் டைட்டில் பொருத்தம். இளம் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்களின் இந்த புது முயற்சி கவனிக்க வைக்கிறது. டிசம்பர் 15-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய்குமார் கூறியதாவது:-
இந்தப் படத்துக்கு அழுத்தமான டைட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தோம். இது டேவிட் ஃபின்சரின் கல்ட் க்ளாஸிக் படத்தின் டைட்டில். அந்தப் படத்தின் கதையும் இந்தப் படத்தின் கதையும் வேறு. அந்தப் பெயரை நாம் கெடுத்துவிட மாட்டோம் என நினைத்து நம்பிக்கையாக இந்த டைட்டில் வைத்தோம்.
2020-ல் படத்தை தொடங்கினோம். 3 வருடமாக நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டோம். இயக்குநர் அப்பாஸ் கடுமையாக உழைத்தார். நல்ல படம் அதற்கான நேரத்தை எடுத்துக்கொள்ளும். அதன்படி நிறைய சிரமங்களுக்குப் பிறகு படத்தை பார்த்த போது, அவுட்புட் நன்றாக வந்துள்ளது. லோகேஷ் கனகராஜூக்கு படத்தை போட்டுக்காட்டி இப்போது இங்கே வந்து நிற்கிறோம்.
இந்தப் படத்தின் பயணம் மிக நெடியது. இந்தப் படத்தை நாங்கள் வியாபாரமாக பார்க்கவில்லை. பர்சனலாக பார்த்தோம். அதனால்தான் இப்படியான ஒரு மேடையில் வந்து நிற்கும்போது எமோஷனலாகிவிட்டேன். மக்களுக்கு இப்படம் பிடிக்கும் என நினைக்கிறேன். நிறைய இளம் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். என்னுடைய உதவி இயக்குநர் அப்பாஸ்தான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அவருக்கு சினிமாதான் எல்லாம். படம் மக்களுக்கு பிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.