மோடி அரசு, மத்திய அமைப்புகளின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துகிறது: ஜெய்ராம் ரமேஷ்

மருத்துவரிடம் ரூ.20 லட்சம் பணம் பறித்ததாகக் கூறி தமிழகத்தில் அமலாக்க இயக்குனரக அதிகாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக மீது காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், நரேந்திர மோடி அரசு, மத்திய அமைப்புகளின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாகவும், அவற்றை அரசியல் கருவிகளாக மாற்றுவதாகவும் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ், “பாஜகவின் சூப்பர் ஸ்டார் பிரச்சாரகர்களில் ஒருவர், இந்த முறை தமிழகத்தில் மீண்டும் தடுமாறியுள்ளார். ராஜஸ்தானில் ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய ED அதிகாரி பிடிபட்ட சில வாரங்களுக்குப் பிறகு, ED இன் மற்றொரு அதிகாரி ரூ.20 லட்சத்துடன் கையும் களவுமாக பிடிபட்டார். மிரட்டி பணம் பறித்தல் மற்றும் லஞ்சம் வாங்குவதற்காக அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மோடி அரசாங்கம் ED/CBI/IT-யின் நற்பெயரை முற்றிலுமாக சேதப்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளையும், அரசைக் கேள்வி கேட்பவர்களையும் மிரட்டி அச்சுறுத்தும் அரசியல் கருவியாக மாற்றியுள்ளது. இப்போது அதன் அதிகாரிகள் சொந்தமாக மிரட்டி பணம் பறிக்கும் மோசடிகளை நடத்துகிறார்கள்” என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

தலைவர்களுக்கு எதிரான வழக்குகள் மற்றும் ரெய்டுகளை மேற்கோள் காட்டி, ED, CBI மற்றும் வருமான வரித்துறை போன்ற மத்திய அமைப்புகளைப் பயன்படுத்தி பாஜக அரசாங்கம் விமர்சகர்களின் வாயை அடைப்பதாக எதிர்க்கட்சிகள் அடிக்கடி குற்றம் சாட்டுகின்றன.