3 மாநிலங்களில் பா.ஜ.க, ஆட்சியை பிடித்ததை அடுத்து, லோக்சபாவுக்குள் நுழைந்த பிரதமர் மோடிக்கு, ‛‛மூன்றாவது முறையாக மோடி அரசு, மீண்டும் மீண்டும் மோடி அரசு” என்ற கோஷம் எழுப்பி பா.ஜ.க, உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் இன்று (டிச.,4) துவங்கி, வரும் 22 வரை நடக்கிறது. இதற்காக லோக்சபாவுக்குள் நுழைந்த பிரதமர் மோடிக்கு சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேச தேர்தல் வெற்றிக்காக வாழ்த்து கூறி, பா.ஜ.க, உறுப்பினர்கள் ‛‛மூன்றாவது முறையாக மோடி அரசு, மீண்டும் மீண்டும் மோடி அரசு” என்று கோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை பிரதமர் மோடி புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக பார்லி வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நான்கு மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. சாமானிய மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்களுக்கும், நாட்டின் பிரகாசமான எதிர்காலத்திற்காகவும் இந்த வெற்றி ஊக்கமளிக்கிறது. இப்படியான சிறப்பான மக்களின் தீர்ப்புக்கு பிறகு, பார்லி., கூட்டத்தை சந்திக்கிறோம். கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். நீங்கள் (எதிர்க்கட்சிகள்) நாட்டுக்கு நேர்மறையான செய்தியை வழங்கினால் அது உங்களுக்கு நன்மை பயக்கும். எதிர்மறையையும், வெறுப்பையும் வெளிப்படுத்துவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.