நாளை(05-12-2023) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சக்திவேல் அறிவித்துள்ளார். தேர்வு நடத்தப்படும் எனவும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்படுவதாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார். நேற்று தொலைதூர கல்வித்திட்டத்தின் கீழ் நடைபெற இருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. அதேபோன்று இன்று நடைபெற இருந்த தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாளை(05-12-2023) நடைபெற இருந்த தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகள் மற்றும் தொலைதூர கல்வித்திட்டத்தின் கீழ் நடைபெற இருந்த தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார். புதிய தேர்வு எப்போது மநடைபெறும் என்ற அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக 4 மாவட்டங்களுக்கு அரசு நாளையும் பொது விடுமுறையினை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசின் தலைமைச் செயலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, “மிக் ஜாம்” சூறாவளியாக வலுப்பெற்று, இன்று (04.12.2023) காலை 08.30 மணியளவில் சென்னைக்கு கிழக்கே, வடகிழக்கு 90 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது வடக்கு, வடமேற்குத்திசையை நோக்கி நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவை அடைய வாய்ப்புள்ளது. இந்தப் புயலானது, வரும் 5ஆம் தேதிக்குள் தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழகத்திற்கு அருகே முற்பகலுக்குள் இந்தப் புயல் கரையைக் கடக்கிறது.
இந்தப் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் மிக அதிக மழை மற்றும் பலத்த காற்று காரணமாக, நாளை 05.12.2023 (செவ்வாய்க்கிழமை) பொது விடுமுறை அறிவிக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி அரசு பின்வரும் உத்தரவுகளை பிறப்பிக்கிறது. அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், அரசு பொது நிறுவனங்களின் அலுவலகங்கள் உட்பட அலுவலகங்கள் / பெருநிறுவனங்கள், வாரியங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை 05.12.2023 அன்று (செவ்வாய்கிழமை) மூடப்படும்.
இருப்பினும், காவல்துறை, தீயணைப்பு சேவை போன்ற அனைத்து அத்தியாவசிய சேவைகள், உள்ளாட்சி அமைப்புகள், பால் விநியோகம், தண்ணீர் விநியோகம், மருத்துவமனைகள்/மருந்துகடைகள், மின்சாரம், போக்குவரத்து, எரிபொருள் விற்பனை நிலையங்கள், ஹோட்டல்கள்/உணவகங்கள், முதலியன மற்றும் பேரிடர் மீட்பு, நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலகங்கள் மற்றும் அதன் நடவடிக்கைகள் வழக்கம் போல் செயல்படும். இந்த இயற்கைப் பேரிடர் காரணமாக நாளை டிசம்பர் 5-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தமிழக அரசு, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் பொது விடுமுறையை அறிவிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.