மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், இதில் ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி தோல்வி கிடைத்துள்ளது. அங்கே எதிர்க்கட்சிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது.
தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் மிசோரம் தவிர மற்ற மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 3 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த நிலையில், தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் வென்றது. மிசோரம் மாநிலத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தொடக்கத்தில் மிசோரம் மாநிலத்தில் இழுபறி இருப்பது போன்ற நிலை காணப்பட்டது. ஆனால், அதன் பிறகு டிரெண்ட் மொத்தமாக மாறியது. அங்கே மிசோரத்தில் ஆளும் கட்சியாக இருந்த மிசோ தேசிய முன்னணிக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 இடங்கள் இருக்கும் நிலையில், எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெறக் குறைந்தது 21 இடங்களில் வெல்ல வேண்டும். ஆனால், ஆளும் மிசோ தேசிய முன்னணிக்கு வெறும் 10 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.
அதேநேரம் அங்கே எதிர்க்கட்சியாக இருந்த ஜோரம் மக்கள் இயக்கத்திற்கு அங்கே ஆதரவு வேற லெவலில் இருக்கிறது. அங்கே மொத்தம் 40 இடங்களிலும் அக்கட்சி போட்டியிட்ட நிலையில் அதில் 27 இடங்களை ஜோரம் மக்கள் இயக்கத்திற்குச் சென்றுள்ளது. இதன் மூலம் மிசோரம் மாநிலத்தில் முதல்முறையாக ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் மிசோரத்தில் கடந்த 2018 வரை காங்கிரஸ் தான் ஆளும் கட்சியாக இருந்தது. ஆனால் இந்தத் தேர்தலில் அவர்களால் ஒரே ஒரு இடத்தை தான் கைப்பற்ற முடிந்துள்ளது. மிசோரத்தில் வலுவான கட்டமைப்பைக் கொண்டிருக்காத பாஜக கூட அங்கே இரண்டு இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. இதன் மூலம் மிசோரத்தில் காங்கிரஸ் முழுமையாகத் தனது இருப்பை இழந்துவிட்டது.
மாநில கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வென்று முதல்முறையாக ஆட்சியை அமைக்க உள்ளது. மிசோரம் மாநிலத்தின் புதிய முதல்வராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி லால்துஹோமா பதவியேற்க உள்ளார். 73 வயதான இவர், செர்ச்சிப் தொகுதியில் போட்டியிட்டு 2,982 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மிசோரம் மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாகக் காங்கிரஸ் மற்றும் மிசோ தேசிய முன்னணி மட்டுமே மாறி மாறி ஆட்சியில் இருந்த நிலையில், அதை மாற்றி ஜோரம் மக்கள் இயக்கம் இப்போது ஆட்சியைப் பிடித்துள்ளது.
மிசோரம் மாநிலம் கிறிஸ்துவ மக்கள் அதிகம் கொண்ட மாநிலம். அதனால், மிசோரம் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெறும் என்பதால் வாக்கு எண்ணிக்கையை வேறு தேதிக்கு மாற்றுமாறு தேர்தல் ஆணையத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வந்த நிலையில் இன்று (டிச.5) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.