சென்னை மற்றும் புறநகரில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் மற்றும் ஆறுகளை கூறு போட்டு விற்று விட்டனர் தமிழக அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தை யாராலும் மறக்க முடியாது. கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்ட நிலையில், சென்னை நகரமே வெள்ளத்தில் மிதந்தது. அதைத்தொடர்ந்து, ஆண்டு தோறும், டிசம்பர் மாதத்தில் கனமழை பெய்வதும், சென்னையின் பெருவாரியான பகுதிகளில் மழைநீர் தேங்குவதும் நிகழ்ந்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மழைநீர் தேங்கும்போதெல்லாம், எதிர்க்கட்சியான திமுக கடுமையாக விமர்சிப்பது வழக்கம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சென்னையில் மழைநீர் வடிகால்களை சீரமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் வடிகால் பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும், இனி மழைநீர் தேங்காது என்றும் அமைச்சர்கள் கூறினர். மழை பெய்யும்போது மழைநீர் சாலைகளில் தேங்கினாலும், சில மணி நேரத்தில் வடிந்துவிடும் என்றனர்.
இந்நிலையில், கொட்டி வரும் கனமழையால் சென்னை மீண்டும் மூழ்கத் தொடங்கியுள்ளது. சென்னையில் விடிய விடிய பெய்த அதி கனமழை காரணமாக பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் ஏரிகள் நிரம்பியுள்ளதால், சென்னை நகர் முழுக்க வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை விடாத சூழலில், மேலும் மேலும் தண்ணீரின் மட்டம் உயர்ந்து வருவதால் சென்னை மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், தொடர் கனமழை சமாளிப்பது கடினமே, இயற்கை சீற்றத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது, இன்றைய ஆளுங்கட்சியினர், தங்கள் பழைய விமர்சனங்களை திரும்பிப் பார்க்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். அவரது பதிவில் கூறியுள்ளதாவது:-
நேற்றிலிருந்து பெய்து வரும் மழையினை எதிர்கொண்டு சமாளிப்பது மிக கடினமான காரியமே. இயற்கையின் சீற்றத்தை கட்டுப்படுத்த யாராலும் முடியாது. ஆனால், இன்று ஆளும் கட்சியில் இருப்பவர்கள், கடந்த காலத்தில் எப்படியெல்லாம் விமர்சித்தார்கள் என்று எண்ணிப்பார்ப்பதோடு, தங்களின் பதிவுகளை திரும்பிப் பார்த்து வெட்கப்பட்டு தலைகுனிய வேண்டும். உண்மையிலேயே, மனசாட்சி இருந்தால் அன்றைய தவறான தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி மன்னிப்பு கேட்பவர்கள் மனிதர்கள்.
கடந்த இரண்டரை வருடங்களில், சென்னையில், மழை நீர் வடிகால்கள் அமைக்க தோண்டிய சாலைகளை, தெருக்களை சீரமைக்காமல் பள்ளங்கள், குழிகளோடு கைவிடப்பட்ட சாலைகளால், தெருக்களால் தான் இன்றைய சீர்கேடு என்பதை அரசு உணர வேண்டும். ஒரு அரசு பொறுப்பேற்று இன்று வரை சாலைகள் அமைக்கப்படாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மழைநீர் வடிகால்வாய்கள் பல தெருக்களில் சாலைகளை ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றன என்பது அவலநிலை. இனியாவது சென்னையில் சாலைகளை அமைக்க ஆவன செய்ய வேண்டும் அரசு. இல்லையேல், மக்களின் அமைதி புரட்சியினை 2024 பாராளுமன்ற தேர்தலில் காண்பார்கள்.
உண்மையில் பரிதாபத்திற்குரியவர்கள் சென்னை மாநகர மக்கள். கடந்த 50 வருடங்களில் சென்னை மற்றும் புறநகரில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் மற்றும் ஆறுகளை கூறு போட்டு விற்று விட்டனர் தமிழக அரசியல்வாதிகளும், அதிகாரிகளும். நீர் போகும் பாதைகளை ஆக்கிரமித்து அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டி பல்லாயிரம் கோடிகளை பெருக்கிக் கொண்டனர். சென்னைவாசிகளோ, சொந்த வீட்டு கனவில், அவை ஆக்கிரமிப்பில், நீர்நிலைகளில் கட்டப்பட்டுள்ளன என்பது தெரிந்தும் தங்கள் வாழ்நாள் சேமிப்பை முதலீடு செய்து விட்டு பெருமழை பெய்யும் போது இன்னலுக்குள்ளாகும் போது அரசியல் வாதிகளையும், அதிகாரிகளையும் நொந்து கொள்வது காலம் கடந்த செயல். நீதிமன்றங்கள் நீர்நிலைகளை அகற்ற உத்தரவிடும் போது, கையூட்டு கொடுத்தாவது தங்களின் சொத்தை காப்பாற்றி கொள்ள அதே அரசியல்வாதிகளிடமும், அதிகாரிகளிடமும் மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள் சென்னை வாசிகள். பணத்துக்காக சொத்தை உருவாக்கிய அரசியல்வாதிகளை, அதிகாரிகளை நொந்து கொள்வதா? அல்லது சொத்துக்காக பணத்தை இழந்த பொது மக்களை நொந்து கொள்வதா? இது ஒரு தொடர்கதை. இதற்கில்லை முடிவுரை. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.