ஒருவருக்கொருவர் உதவுவதே சிறந்த மனிதநேயம் என்று பார்த்திபன் கூறியுள்ளார்.
மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்நிலையில் புயலை பாதுகாப்புடன் எதிர்கொள்வோம் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் பார்த்திபன் கூறியிருப்பதாவது:-
அன்றாடம் உழைத்து உண்பவர்களுக்கு இந்த பேய் மழையும், மிக்ஜாம் புயலும் மத்திய பிரதேச விரோதிகள். தேசத்தின் ஒரு பகுதியில் காங்கிரஸும், மறுபகுதியில் பிஜேபியும் வெற்றி பெறலாம். ஆனால் ஏழை மக்கள் உடலின், மத்திய பிரதேசத்தில் பசி இல்லாமல் பார்த்துக் கொள்வதே தேசிய வெற்றி. மழையை காதலி எனலாம் கவிதையும் எழுதலாம். ஆனால் இயலாதோர்க்கு இயன்றதை செய்வதே இந்நேரத்தில் சிறந்த செயல். ‘புதிய பாதை’க்கு முன் வறுமையை உண்டு வளர்ந்தவன் என்பதால், புயல் செய்திகளைக் கேட்க முடியாமல் பசி காதை அடைக்கும் மக்களை நோக்கியே என் கவனம் மையங்கொண்டுள்ளது. அரசு செய்யும் உதவிகளை மீறி, அடுத்த அடுப்பில், அடுத்த வீட்டில், அடுத்த தெருவில் இப்படி அடுத்தவர்களின் பிரச்சினைகளுக்கு ஒருவருக்கொருவர் உதவுவதே சிறந்த மனிதநேயம். இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பதிவில், ‘மத்திய பிரதேசம்’என்று நான் குறிப்பிட்டது உடலின் முக்கிய பகுதியான வயிறு. அதன் பசியின் கொடுமையை, கடுமையை சொல்லவே. மற்றபடி பிஜேபியையோ காங்கிரஸையோ உயர்நிலைப் படுத்தும் அரசியலை முன்னிலைப் படுத்தும் அரசியலை அல்ல. ஓரிருவர் என் கருத்தை தவறாகப் புரிந்துக் கொண்டு அவர்கள் கருத்தைச் சொல்கிறார்கள். அவரவர் கருத்தை அவரவர் சொல்லட்டும். அடுத்தவர் கருத்தை அதுவும் இதுபோன்ற அசாதாரண சூழலில் தங்கள் கருத்தைத் திணித்து அசிங்கப்படுத்த வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.