சென்னை ஆவின் பால் தட்டுப்பாடு: அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை!

சென்னையில் பால் தட்டுப்பாடு பல இடங்களில் கடுமையாக நிலவி வரும் நிலையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இது தொடர்பாக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

சென்னையில் புயல் காரணமாக பல இடங்களில் கடுமையான பால் தட்டுப்பாடு நிலவி வருகிறது. டீ கடைகளில் கூட போதிய பால் கிடைக்காத நிலை ஏற்பட்டு உள்ளது. பல வீடுகளில் பால் இல்லை. பெரும்பாலான இடங்களில் பால் வாங்க மக்கள் வரிசையில் நிற்கும் அவலம் ஏற்பட்டு உள்ளது. சென்னையில் பால் தட்டுப்பாடு பல இடங்களில் கடுமையாக நிலவி வருகிறது. இந்த நிலையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இது தொடர்பாக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-

பால் வினியோகத்தை நேரடியாக கண்காணித்து ஒவ்வொரு பகுதிகளுக்கும் வாகனங்கள் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது. நாளை காலை அனைத்து முகவர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு தட்டுப்பாடு இன்றி பால் கிடைக்கும். பால் விற்பனையை தடையின்றி செய்ய வேண்டும். ஆவின் பால் பவுடர் போதிய அளவு கையிருப்பு உள்ளது; எனவே ஆவின் முகவர்கள், விற்பனையாளர்கள் உடனடியாக தேவையான அளவு கொள்முதல் செய்து மக்களுக்கு தடையின்றி விற்பனை செய்ய வேண்டும்; பால் சென்றடைய முடியாத இடங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

சென்னையில், பால் விநியோகத்தில் ஆவின் பெரும்பங்கு வகித்தாலும், ஒட்டுமொத்த பால் விநியோகத்தில் பிற நிறுவனங்களின் பங்களிப்பும் உள்ளது. வெள்ளம் சூழ்ந்திருக்கும் பகுதிகளில் பால் விநியோகம் சவாலாக இருப்பதால், அதை சீர்படுத்த, மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியபடி தனியார் நிறுவனங்களுடன் காணொலி காட்சி வாயிலாக கலந்தாலோசனை நடைபெற்றது. பொதுமக்கள் பதட்ட மனநிலையில் அதிக அளவில் பால் வாங்கி இருப்பு வைப்பதை தவிர்க்க வேண்டும். அதுவே, பால் தேவைப்படும் பிறருக்கும் பால் கிடைக்க வழிவகுக்கும். அதை மட்டும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வேளச்சேரி பகுதிக்கு வழக்கமான விநியோகத்தை விட கூடுதலாக 10,000 லிட்டர் பால் அனுப்பப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர்கள் பதற்றமடைந்து அன்றாட தேவையை விட அதிகமாக பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்; அம்பத்தூர் பண்ணையில் வெள்ளம் வடிந்து சீரடையாத காரணத்தால், அங்கிருந்து விநியோகிக்கப்படும் பகுதிகளில் சிறிது காலதாமதம் ஏற்படலாம்.

ஆவின் பால் & தனியார் பால் விற்பனையில், நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி விற்பனையாளர்கள் ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஆவின் நிறுவனம் வழக்கமாக சென்னையில் விநியோகிக்கும் 15 லட்சம் லிட்டர் பாலை கடும் மழை புயலை பொருட்படுத்தாமல் விநியோகம் செய்துள்ளது. தேவைக்கேற்றவாறு மொத்த விற்பனையாளர்களுக்கும் சில்லறை விற்பனையாளர்களுக்கும் பால் வினியோகிக்கப்பட்டுள்ள நிலையில் ஆவின் பாலை பொது மக்களுக்கு வழங்காமல் கள்ள சந்தையில் விற்கவோ அதிக விலைக்கு விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு முகவர் உரிமமும் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.