குடியிருப்புகளைச் சூழ்ந்திருக்கும் மழை நீரை வெளியேற்ற போர்க்கால நடவடிக்கை தேவை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
மிக்ஜம் புயலால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபங்களையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். வரலாறு காணாத அளவுக்கு வெள்ளத்தை ஏற்படுத்திய மிக்ஜம் புயலால் வேளச்சேரி, மடிப்பாக்கம், தாம்பரம், பள்ளிக்கரணை, முடிச்சூர் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்திருக்கும் மழைநீரால் லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
மிகப்பெரிய சதுப்பு நிலமாக இருந்த பள்ளிக்கரணை மற்றும் முக்கிய நீர்நிலை பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் கட்டடங்களின் விளைவே ஒவ்வொரு பருவமழையின் போதும் வெள்ளம் ஏற்பட காரணம் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பரந்தூரில் நீர்நிலைகளில் தேங்கியிருக்கும் மழைநீரை சுட்டிக்காட்டி, இந்த நீர்நிலைகளை ஆக்கிரமித்து சென்னைக்கு இரண்டாவது விமானநிலையம் தேவைதானா? என அப்பகுதி மக்களே கேள்வி எழுப்புவதையும் பார்க்க முடிகிறது.
மிக்ஜம் புயல் காரணமாக தற்போது பெய்திருக்கும் கனமழையை உதாரணமாக கொண்டு வெள்ள நீரால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளை முழுமையாக கண்டறிந்து வரும் காலங்களில் அங்கு கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மேலும் சென்னை முழுவதும் உள்ள நீர்நிலைகளை கண்டறிந்து முறையாக தூர்வாரப்படுவதோடு நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதாலோ, அதன் மீது பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை வீசுவதாலோ ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியமும் உருவாகியுள்ளது.
சென்னை விரிவாக்கம் என்ற பெயரில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவது முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்படுவதோடு, நீர்நிலைகளை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்வோரை கண்காணிக்க ஒரு குழு அமைத்து வரன்முறைப்படுத்த வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்களின் மூலம் ஓரளவிற்கு வெள்ள பாதிப்புகளை தவிர்த்தாலும் அரசின் நடவடிக்கை முழுமையான வெள்ளத்தை தடுக்க உதவவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். சென்னை மாநகராட்சி சார்பில் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மழைநீர் வடிகால்களும் போதுமான அளவு பலனளிக்கவில்லை என்பதையே சென்னையின் முக்கிய பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீர் உணர்த்துகிறது.
புறநகர் பகுதிகளில் மட்டுமல்லாது சென்னையின் பிரதான பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீரில் கழிவுநீரும் கலந்திருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பல்வேறு நோய்த்தொற்றுகள் பரவும் அபாயமும் ஏற்பட்டிருப்பதால், சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். எனவே, இனிவரும் காலங்களில் வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் நிரந்த தீர்வை ஏற்படுத்துவதோடு, தற்போது மழைநீர் அதிகளவு சூழ்ந்திருக்கும் பகுதிகளுக்கு கூடுதல் மீட்பு படையினரை அனுப்பி வைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.