‘நாம் விரும்பும் சென்னை’ என்ற ஆவணத்தில் நாங்கள் முன்வைக்கின்ற யோசனைகளை தமிழக அரசு பயன்படுத்த வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
`மிக்ஜம்’ புயல் மழையால் சென்னையில் பல பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னை தரமணி மற்றும் அதனையொட்டிய பகுதிகளை பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று பார்வையிட்டார். மேலும் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு, நிவாரண உதவிகளையும் வழங்கினார். பின்னர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-
சமீபத்தில் `மிக்ஜம்’ புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகரம் இயல்பு நிலைக்கு வருவதற்கு இன்னும் தாமதம் ஆகிக்கொண்டு இருக்கிறது. பல பகுதிகளில் மக்களுக்கு மின்சாரம், உணவுப்பொருட்கள், தண்ணீர் சேரவில்லை. ஆகவே அரசு உடனடியாக மக்களை மீட்டெடுக்க வேண்டும். மீட்பு பணிகளை இன்னும் வேகப்படுத்த வேண்டும். இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய தமிழக அரசு ரூ.5 ஆயிரம் கோடி வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுள்ளது. அதை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும். சென்னையில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய மந்திரி ராஜநாத் சிங் டெல்லிக்கு சென்று நிலைமையை எடுத்துக்கூறி நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளோம் என்று கூறிய முதல்-அமைச்சர் இந்த இழப்புகளை பார்க்கும்போது, ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்தது போல் தெரியவில்லை. அ.தி.மு.க. காலத்தில் செய்த பணியை சரிசெய்யவே ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளோம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. இதுகுறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.
‘நாம் விரும்பும் சென்னை’ என்ற ஆவணத்தில் நாங்கள் முன்வைக்கின்ற யோசனைகளை தமிழக அரசு பயன்படுத்த வேண்டும். மக்கள் சில நாட்களில் இவைகளை மறந்துவிடுவார்கள். அரசு நிவாரணம் வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்துவிடுவார்கள். மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
புதிய தொழில்நுட்பங்களை வைத்து ஜப்பான் நாட்டில் எந்தெந்த இடத்தில் மழைப்பொழிவு என்பது குறித்து `மேக்கிங்’ செய்து கண்டறியும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அதற்கு ஏற்ற கால்வாய்களை அமைத்துள்ளனர். அதுபோன்ற தொழில்நுட்பத்தை இங்கேயும் பயன்படுத்த வேண்டும். தமிழகத்தில் அரசியல்வாதிகள் பெரும் ஊழல், லஞ்சம் என பல மோசடிகளை செய்து இந்த சென்னை மாநகரத்தை நாசம் செய்துவிட்டார்கள்.
இதற்கு முன்பெல்லாம் புயல் வந்தது. காலநிலை மாற்றம் காரணமாக இனி பெரும் புயல் வரப்போகிறது. மிக சோதனையான காலத்தை நாம் எதிர்கொள்ள உள்ளோம். அதனை எதிர்கொள்ள வலிமையான கட்டுமானங்கள் தேவை. சென்னையில் உள்ள வடிகால் வசதி இந்தியாவில் வேறெந்த நகரத்திலும் இல்லை.
அப்படி இருந்தும் இவ்வளவு பாதிப்புகள் என்றால் அரசின் நடவடிக்கைகள் தோல்வியடைந்ததே காரணம். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 10,000 நிவாரணத் தொகை வழங்க வேண்டும். சென்னையில் நோய் தொற்றை தடுக்க அனைத்து இடங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.