ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்ததற்கு எதிரான வழக்குகளில் உச்சநீதிமன்றம் வரும் 11-ந் தேதி தீர்ப்பளிக்கிறது.
மத்திய பாஜக அரசு 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை அதிரடியாக ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும் லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் உருவாக்கப்பட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு ஓராண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் சட்டசபை முடக்கப்பட்டு இன்னமும் தேர்தல் நடைபெறாமல் உள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு ரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ந் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க தொடங்கியது. இந்த வழக்கு விசாரணை மொத்தம் 16 நாட்கள் நடைபெற்றன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, அரசியல் சாசனத்தின் பிரிவு 1, 370-வது பிரிவில் அது நிரந்தரமாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பவில்லை. அந்த பிரிவு நிரந்தரமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்படமுல்லை என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்த கருத்து மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு தரப்பில், 370-வது பிரிவு நீக்கப்பட்டதை நியாயப்படுத்தும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 5-ந் தேதி வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த வழக்கில் வரும் 11-ந் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. நாடு முழுவதும் இந்த தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.