செக் மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ராமநாதபுரம் நடுவர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதோடு வரும் 2ம் தேதிக்குள் அவரை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என சென்னை அண்ணாநகர் போலீசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கினார். மேலும் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். அதாவது கடன் வாங்கி தருவதாக கூறி அவர் மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இதுபோன்ற சர்ச்சைகள் மற்றும் கைதால் அவருக்கான படவாய்ப்பு இல்லாத நிலை உருவானது. இதனால் அவர் தற்போது திரைப்படங்களில் நடிக்காமல் உள்ளார்.
இந்நிலையில் தான் தற்போது நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு மீண்டும் கைது செய்யப்படும் சூழல் உருவாகி உள்ளது. அதாவது ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தை சேர்ந்த முனியசாமி என்பவர் உப்பளம் மற்றும் விரால் பண்ணை நடத்தி வருகிறார். இவர் தனது தொழிலை விரிவுப்படுத்தும் நோக்கத்தில் கடன் வாங்க முடிவு செய்தார். இதையடுத்து பவர் ஸ்டார் சீனிவாசன் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, ‛‛ரூ.15 கோடி கடன் வாங்கி தருகிறேன். இதற்காக முன்பணம் மற்றும் ஆவண செலவுக்காக ரூ.14 லட்சம் கொடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். இதை நம்பிய முனியசாமி கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பவர் ஸ்டாருக்கு ரூ.14 லட்சம் வழங்கி உள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் கூட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் அவருக்கு கடன் பெற்று கொடுக்கவில்லை.
இதையடுத்து முனியசாமி கேட்டு கொண்டதன் பேரில் பவர் ஸ்டார் சீனிவாசன் செக் வழங்கி உள்ளார். ஆனால் பணம் இன்றி செக் திரும்பி உள்ளது. மேலும் பணத்தை முனியசாமி கேட்டதற்கு பவர் ஸ்டார் சீனிவாசன் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து முனியசாமி சார்பில் ராமநாதபுரம் நடுவர் நீதிமன்றத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது செக் மோசடி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் பலமுறை பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு உத்தரவிட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் புறக்கணித்துள்ளார். இந்நிலையில் தான் தற்போது ராமநாதபுரம் நீதிமன்றம் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. அதோடு அந்த பிடிவாரண்ட் சென்னை அண்ணாநகர் போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் 2024 ஜனவரி 2ம் தேதிக்குள் பவர் ஸ்டார் சீனிவாசனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் பவர் ஸ்டார் சீனிவாசன் கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.