இந்தியா கூட்டணியின் 4-வது கூட்டம் வரும் 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது!

இந்தியா கூட்டணியின் 4-வது கூட்டம் வரும் 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியில் இருக்கும் பாஜக, வரும் தேர்தலிலும் வென்று ஹாட்ரிக் முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரத்தில் பாஜகவை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி ஆகிய கட்சிகள் இணைந்த ஒருங்கிணைந்து நாடு முழுவதும் போட்டியிட திட்டமிடப்பட்டன. எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு ’இந்தியா’ என பெயர் வைத்துள்ளன. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் பெங்களூரிலும் மூன்றாவது கூட்டம் மும்பையிலும் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சி தனது முழு கவனத்தையும் அங்கு திருப்பியது. இதனால், இந்தியா கூட்டணிக்கு சில சலசலப்புகள் எழுந்தன. இந்தியா கூட்டணியில் உள்ள அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கு மத்திய பிரதேசத்தில் சீட் ஒதுக்க காங்கிரஸ் மறுப்பு தெரிவித்ததாக அகிலேஷ் குற்றம் சாட்டினார். மேலும் காங்கிரசை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில், ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரண்டு மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்துள்ளது அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் முனைப்புடன் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் பின்னடவை ஏற்படுத்தியது. கூட்டணிக்குள் ஆதிக்கம் செலுத்தும் காங்கிரஸ் கட்சியின் கனவு தவிடுபொடியானது.

இந்த நிலையில்தான், இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் வரும் 19 ஆம் தேதி நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில், “இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் 4-வது ஆலோசனைக் கூட்டம் வரும் 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும்” என்று பதிவிட்டுள்ளர். இந்தக் கூட்டத்தில் தொகுதி பங்கீடு, ஒன்றாக தேர்தல் பொதுக்கூட்டங்களில் அரசியல் தலைவர்கள் பங்கேற்பது உள்ளிட்ட முக்கிய சவால்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இந்தக் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.