எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மஹூவா மொய்த்ரா மனு!

எம்.பி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மஹூவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா. இவர் மீது, நாடாளுமன்ற லோக்சபாவில் பிரபல தொழிலதிபர் அதானிக்கு எதிராக கேள்வி கேட்க தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, மஹூவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டு குறித்து பாஜகவின் எம்.பி. வினோத் குமார் சோன்கர் தலைமையிலான நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவடைந்த நிலையில், கடந்த மாதம் அறிக்கையை நெறிமுறைகள் குழு வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையில் மஹூவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. நன்னடத்தை குழுவில் இதற்காக வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் மஹூவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பரிந்துரை ஏற்கப்பட்டது.

இந்த நிலையில், லோக்சபாவில் கடும் அமளிக்கிடையே மஹூவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யும் பரிந்துரையை நன்னடத்தை குழு தலைவரான பாஜகவின் வினோத் குமார் சோன்கர் தாக்கல் செய்தார். அப்போது மஹூவா மொய்த்ராவுக்கு எதிரான அறிக்கை மீது விவாதம் நடந்தது. இந்த விவாதத்தின் முடிவில் மஹூவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை சபாநாயகர் ஓம் பிர்லா கொண்டு வந்தார். எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே மஹூவா மொய்த்ராவின் எம்பி பதவியை பறிக்கும் தீர்மானம் அதிரடியாக நிறைவேற்றப்பட்டது.

எம்பி பதவி பறிக்கப்பட்டது குறித்து மஹூவா மொய்த்ரா கூறுகையில், “எம்.பி பதவியில் இருந்து என்னை நீக்க நெறிமுறைகள் குழுவிற்கு அதிகாரம் இல்லை. நெறிமுறைகள் குழு ஆதாரம் இன்றி செயல்பட்டுள்ளது. என்னை பேசவிடாமல் செய்வதன் மூலம் அதானி விவகாரத்தை திசை திருப்பிவிடலாம் என மோடி அரசு நினைக்கலாம். எதிர்க்கட்சிகளை நசுக்குவதற்கான ஆயுதமாக இந்தக் குழு மாறியுள்ளது. ரூல் புக்கில் உள்ள அனைத்து விதிகளையும் இந்தக் குழு மீறியுள்ளது” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், எம்.பி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மஹூவா மொய்த்ரா மனு தாக்கல் செய்துள்ளார்.