பெரிய இயக்குனர்கள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று ஜோதிகா கூறியுள்ளார்.
நட்சத்திர தம்பதிகளான சூர்யா-ஜோதிகாவுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா, சமீபத்தில் வெளியான காதல்-தி கோர் படத்தில் மம்முட்டிக்கு மனைவியாக நடித்திருந்தார். படம் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் நேர்காணல் ஒன்றில் ஜோதிகா கூறியதாவது:-
சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் அமைவதற்காக அதிகமாக உழைக்கிறேன். கதாநாயகிகள் 10 சதவீதம் அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது. பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை ரசிகர்கள் விரும்ப வேண்டும். பெரிய கதாநாயகர்களை மட்டும் உயர்த்தி பிடித்தால் கதாநாயகிகள் எப்படி வளர முடியும்?
புது இயக்குனர்கள் மட்டுமே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுக்கின்றனர். பெரிய இயக்குனர்கள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்தி, மலையாள மொழிகளில் பெண்களை மையப்படுத்தி படங்கள் இயக்கப்படுகின்றன. தமிழில் அப்படி இல்லாதது வருத்தம். திருமணத்திற்கு பிறகு நான் தமிழ் பேச பழகிவிட்டேன்.
குழந்தைகளுக்கு நாங்கள் திட்டமிட்டதால் நடிப்பதற்கு சில காலம் இடைவெளி கொடுத்தேன். சினிமாவை தாண்டியும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. குழந்தைகளா? சினிமாவா? என்றால் குழந்தைகளுக்குதான் முக்கியத்துவம் கொடுப்பேன். ரசிகர்களுக்கு என் மேல் பாசம் இருந்தால் தமிழ்நாடு மருமகள் என்பார்கள்.
கோபம் வந்தால் இந்திக்காரி என்பார்கள். சமூக வலைதளத்தில் என்னை குஷி ஜோதிகா என்றும் குயின் எனவும் சிலர் கிழவி என்றும் கூறுவார்கள். இதை பற்றி நான் கவலைப்படமாட்டேன். எப்போதும் ஒரே கதாபாத்திரமில்லாமல் வில்லி கதாபாத்திரம் வந்தாலும் நடிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.