ஆட்சியாளர்கள் விருப்பத்தை உச்சநீதிமன்றம் தீர்ப்பாக்கியது ஏமாற்றம் அளிக்கிறது: பெ.மணியரசன்

ஆட்சியாளர்கள் விருப்பத்தை உச்சநீதிமன்றம் தீர்ப்பாக்கியது ஏமாற்றம் அளிக்கிறது என்று பெ.மணியரசன் கூறியுள்ளார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளதாவது:-

இந்திய விடுதலைக்கு முன் தனிநாடாக விளங்கிய ஜம்மு-காஷ்மீர், இந்திய விடுதலைக்குப்பின் இந்நாட்டுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அது இந்தியாவுடன் தனிச் சிறப்புரிமை கொண்ட மாநிலமாக இணைக்கப்பட்டது. அந்தத் தனிச் சிறப்புரிமை இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 370-இன் கீழ் வழங்கப்பட்டது. இந்தச் சிறப்புரிமை உறுப்பை, 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு 5-ஆம் நாள் குடியரசுத் தலைவர் ஆணையின் கீழ், மோடி அரசு இரத்துச் செய்தது. அத்துடன் அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் என்றும் லடாக் என்றும் இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாகப் பிரித்து, அதற்கிருந்த மாநில அங்கீகாரத்தையும் இரத்துச் செய்தது மோடி அரசு. குடியரசுத் தலைவரின் மேற்படி ஆணைகளை நாடாளுமன்றத்தில் வைத்து சட்டத்திருத்தமாகவும் நிறைவேற்றியது .

மோடி அரசின் மேற்படி உரிமைப் பறிப்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் போட்ட வழக்கில், தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச்சட்ட அமர்வு நேற்று (11.12.2023) தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கிருந்த உறுப்பு 370 ஐ நீக்கியதும், லடாக்கைத் தனியாகப் பிரித்ததும் செல்லும் என்றும், எஞ்சிய ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநிலத் தகுதி வழங்கி 2024 செப்டம்பர் 30-க்குள் சட்டப் பேரவைத் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அது தீர்ப்பு வழங்கியுள்ளது.

இத்தீர்ப்பு மோடி அரசின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக உள்ளது. இதனை வெட்ட வெளிச்சம் ஆக்கும் வகையில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி இத்தீர்ப்பை வெகுவாகப் பாராட்டி வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சிறப்புரிமை உறுப்பு 370 இல்லாத ஜம்மு-காஷ்மீரில் இந்திக்காரர்கள் போன்ற வெளிமாநிலத்தவர்களும், அதானி-அம்பானி உள்ளிட்ட வெளிமாநிலப் பெரு முதலாளிகளும், சிறு முதலாளிகளும் புகுந்து ஆக்கிரமிக்கக் கதவு திறந்து விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு போன்ற முழு மாநிலத் தகுதி உள்ள மாநிலங்கள் ஏற்கெனவே நடைமுறையில் ஒன்றியப் பிரதேசங்களாக (defacto-Union territories) மாற்றப்பட்டு வருவதை அனைவரும் அறிவர்.

ஜம்மு-காஷ்மீருக்கு அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்ட 370 சிறப்புரிமை தற்காலிகமானதுதான் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுவதற்கு அரசமைப்புச் சட்டப்படியான சான்று எதுவுமில்லை. ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததை நீட்டிப்பதா அல்லது தனியே பிரிந்து சென்றுவிட அனுமதிப்பதா என்பது குறித்து ஜம்மு-காஷ்மீர் மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்துவதாக இந்திய அரசு 1950 களில் ஐநா மன்றத்தில் உறுதி அளித்தது. இதன்படி, ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததுதான் தற்காலிகமானது என்றாகிறதே தவிர, அதன் சிறப்புரிமை 370 தற்காலிகமானது என்பதற்குச் சான்று இல்லை. கருத்து வாக்கெடுப்பு நடத்துவதாகக் கூறிய உறுதிமொழியை இந்திய அரசு செயல்படுத்தவில்லை. ஆனால், தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் 370 ஐ முற்றாக நீக்கியது, சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளோருக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் கருத்தையும் கேட்டுத்தான் 370 நீக்கத்தையும், ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று பிரித்ததையும் இந்திய அரசு முடிவு செய்திருக்க வேண்டும். தலைமை நீதிபதி சந்திரசூட் ஆயம், சட்டப் பேரவை இல்லாதபோது அதைக் கேட்க வேண்டிய அவசியமில்லை என்று தீர்ப்பில் கூறியிருப்பது அரசமைப்புச் சட்டப்படி வழங்கப்பட்டுள்ள சனநாயகத்தைப் பறிப்பதாகும்.

இந்திய அரசு, இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் மதிக்காமல், சர்வதேச சட்டங்களையும் மதிக்காமல் 370 சிறப்புரிமையை இரத்து செய்ததும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாகப் பிரித்ததும் மோடி அரசின் ஆரியத்துவா ஒருமை வாதத்தின் முனைப்பாகும். அதற்கு அரசமைப்புச் சட்டத் தகுதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயல் ஆகும். ஒன்றியப் பிரதேசமாக உள்ள ஜம்மு காஷ்மீரை முழு மாநிலமாக்க வேண்டும் என்று டி.ஒய். சந்திரசூட் ஆயம் தீர்ப்பில் கூறியிருப்பதில் நீதித்துறையின் புதிய பங்களிப்பு எதுவும் இல்லை. இதற்கான உறுதியை நாடாளுமன்றத்தில் ஜம்மு-காஷ்மீர் சிறப்புரிமை 370-ஐ நீக்கிடும் சட்ட முன்வடிவை முன்மொழிந்து பேசியபோதே உள்துறை அமைச்சர் அமித்ஷா பின்னர் முழுமாநிலத்தகுதி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

இத்தீர்ப்பை மாற்றிட, சட்ட அடிப்படையிலான மாற்று நிவாரணங்களைத்தான் ஜம்மு-காஷ்மீர் மக்கள் தேட வேண்டி இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.