கதாநாயகியாக 21 ஆண்டுகள் கடந்ததை வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகை திரிஷா.
அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா, லைலா உள்ளிட்டோர் நடித்த ‘மௌனம் பேசியதே’ திரைப்படம் கடந்த 2002-ம் ஆண்டு வெளியானது. இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்த திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இந்த படத்தின் தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதே சமயம், ‘ஜோடி’ உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்திருந்த நடிகை திரிஷா, இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ‘சாமி’, ‘கில்லி’, ‘ஆறு’ உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
அண்மையில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களிலும் திரிஷாவின் நடிப்பு பாராட்டைப் பெற்றது. கதாநாயகியாக அறிமுகமாகி 21 ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை, தமிழில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை திரிஷா, தனக்கு வாழ்த்து கூறிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.