தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும், பாதுகாப்பும் செய்து கொடுக்கப்படும்: கேரளா

தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று கேரளாவில் தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும், பாதுகாப்பும் செய்து கொடுக்கப்படும் என கேரள தலைமைச் செயலாளர் உறுதி அளித்துள்ளார்.

சபரிமலை சீசன் உச்சத்தில் உள்ளது, அங்கே அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டம் காரணமாக அதிகாரிகள் திணறி வருகின்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். பம்பையில் குவிந்துள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் காரணமாக அங்கே அதிகாரிகள் திணற தொடங்கி உள்ளனர். சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல், எரிமேலி பகுதியிலும் கட்டுக்கடங்காத கூட்டம் உள்ளது. இதனால் அடிப்படை வசதிகளை பக்தர்களுக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் பக்தர்கள் சபரிமலை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 10 வருடங்களில் இருந்ததை விட கூடுதல் கூட்டம் இந்த முறை கோவிலில் உள்ளது. இதனால் அங்கே கடுமையான நெரிசல் உள்ளது. 36 மணி நேரம் வழிபாடு செய்ய காத்திருக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

சபரிமலைக்கு செல்லும் போது அப்பாச்சிமேடு பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமி நிலைகுலைந்து விழுந்து உயிரிழப்பு. சிறுமிக்கு இதய பாதிப்பு ஏற்கனவே இருந்துள்ளது. சில நாட்களாக சபரிமலையில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டத்தை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது. சபரிமலையில் கட்டுக்கடங்காத வகையில் கூட்டம் இருப்பதால், பலர் ஐயப்பனை தரிசிக்காமலேயே வீடு திரும்புகின்றனர்; பதினெட்டாம் படியில் ஏற 4 மணி நேரம் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது. காட்டுப்பாதை வழியே பலர் உள்ளே நுழைவதாலும், சிக்கல் எழுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று கேரளாவில் தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும், பாதுகாப்பும் செய்து கொடுக்கப்படும் என கேரள தலைமைச் செயலாளர் உறுதி அளித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டிலிருந்து கேரள ஐயப்பன் கோவிலுக்குச் சென்றுள்ள பக்தர்கள் அடிப்படை வசதிகளும் பாதுகாப்பும் இன்றி மிகவும் சிரமப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதனையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை கேரள மாநில தலைமைச் செயலாளர் உடன் தொடர்பு கொண்டு தமிழ்நாட்டிலிருந்து வரும் ஐயப்ப பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்புக்கான அனைத்து உதவிகளையும் ஏற்பாடு செய்து உதவிட கேட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அதன்படி, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் கேரள மாநில தலைமைச் செயலாளர் வி. வேணு, இ.ஆ.ப., அவர்களிடம் தொலைபேசி மூலம் கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மூலம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கோரிக்கையை ஏற்று, கேரள மாநில தலைமைச் செயலாளர் அவர்கள் தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு கேரளாவில் தக்க அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், பாதுகாப்பினை உறுதி செய்யவும் கேரள மாநில அரசு சார்பில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார்.