நாடாளுமன்ற வளாக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: கே.எஸ்.அழகிரி

புதிய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதற்கு உள்துறை மந்திரி அமித்ஷா தான் பொறுப்பேற்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

புதிய நாடாளுமன்ற வளாகத்தில் அத்துமீறி இளைஞர்கள் நுழைந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மைசூர் பா.ஜ.க. எம்.பி., பரிந்துரையின் பேரில் பார்வையாளர் மாடத்திற்கு வந்த அந்த இளைஞர் திடீரென்று இருக்கைகள் மீது எகிறி குதித்து மக்களவைக்குள் நுழைந்தது பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

2001-ல் நடந்த பாராளுமன்றத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்த அந்த சம்பவத்தின் நினைவு நாளான இன்று இத்தகைய சம்பவம் நடந்திருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. புதிய நாடாளுமன்றத்தில் இத்தகைய பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதற்கு உள்துறை மந்திரி அமித்ஷா தான் பொறுப்பேற்க வேண்டும். இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் பின்னணி குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் இவர்களை பாராளுமன்றத்திற்குள் அனுமதிக்க பரிந்துரை செய்தவர் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர். அவரையும் இதுகுறித்து விசாரித்து உண்மை நிலையை கண்டறிய வேண்டும். அத்துமீறி நுழைந்தவர்களின் பின்னணி என்ன? அவர்களது நோக்கம் என்ன? அவர்களுக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மைசூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் என்பதும் தெரியவந்துள்ளது.

எனவே, இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நாடாளுமன்ற வளாகத்திற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முழுமையான பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் உறுதி செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார்.