எம்.பி.க்கள் இடைநீக்கத்தை திரும்ப பெற வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

மக்கள் பிரதிநிதிகளின் குரலை நசுக்குவது அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளின் மீதான வெளிப்படையான தாக்குதலாகும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திமுக-வின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட15 எதிர்க்கட்சி எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது; நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு மீறல் குறித்து கேள்வி எழுப்பும் மக்கள் பிரதிநிதிகளின் குரலை நசுக்குவது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளின் மீதான வெளிப்படையான தாக்குதலாகும். மத்திய அரசு சகிப்புத்தன்மையற்ற போக்கை கைவிட்டு, எம்.பி.க்கள் இடைநீக்கத்தை திரும்ப பெற வேண்டும். என தெரிவித்துள்ளார் .

முன்னதாக சென்னை அண்ணாநகர், திருவல்லிக்கேணி பகுதியில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சென்னையில் ரேஷன் கார்டுகள் இல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றார்.

தொடர்ந்து நாடாளுமன்றத்தில் புகை குண்டு வீசப்பட்ட விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், புகை குண்டு வீசியவர்கள் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு அனுமதி கொடுத்தவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய எம்.பி மீது நடவடிக்கை எடுத்திருப்பது ஜனநாயக படுகொலை என்று கூறினார்.

மேலும் அவர், பிரதமர் மோடி நாடாளுமன்றம் வருவதற்கே ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டியுள்ளது. அவர் எப்பொழுதாவதுதான் நாடாளுமன்றம் வருகிறார். அதனால் பாதுகாப்பை விட்டு விட்டனர் போல என்று கூறினார்.