நாடாளுமன்ற வளாகம் மற்றும் லோக்சபாவில் நுழைந்து வண்ண ஸ்பிரே அடித்து அச்சுறுத்திய வழக்கில் மேலும் 2 பேரை டெல்லி தனிப்படை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் நாடாளுமன்ற லோக்சபாவுக்குள் அத்துமீறி நுழைந்த 2 நபர்கள் ஸ்பிரே அடித்தும் கலர் புகை குண்டுகளையும் வீசினர். இதையடுத்து அவர்களை எம்பிக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்களின் பெயர்கள் சாகர் சர்மா மற்றும் டி மனோ ரஞ்சன் (வயது 35) என்பது தெரியவந்தது. அதேபோல் நாடாளுமன்ற வளாகத்தில் ஸ்பிரே அடித்த ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியை சேர்ந்த நீலம் (42) மற்றும் அமோல் ஷிண்டே (25) ஆகியோரும் போலீசாரிடம் சிக்கினர். இவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் டெல்லி தனிப்படை மற்றும் தீவிரவாத ஒழிப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 4 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 7 நாள் காவலில் போலீசார் எடுத்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே தான் இந்தச் சம்பவத்தின் சூத்திரதாரியான லலித் ஜா நேற்று டெல்லி போலீசில் சரணடைந்தார். கொல்கத்தாவைச் சேர்ந்த இவர் ஆசிரியர் ஆவார். இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தான் வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை இன்று டெல்லி தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்களின் பெயர்கள் மகேஷ், கைலாஷ் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் ஏற்கனவே கைதான 4 பேருடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில் 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.