கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2013 ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2014ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளைப் பதிவு செய்து இந்த பதில் மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த பதில் மனுக்களில் உள்ள தகவல்கள் நீதிமன்றத்திற்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
தோனி தொடர்ந்த அந்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில், “ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியுள்ள கருத்துக்கள், நீதிமன்றங்களைக் களங்கப்படுத்தும் வகையில் இருப்பதுடன், நீதித்துறை மீது பொது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் இருப்பதால், அவரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். மேலும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் அனுமதியைப் பெற்றே இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாகவும் தோனி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர்மோகன் அமர்வு, ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமார் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாகக் கூறி, அவருக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. அப்போது தண்டைக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சம்பத்குமார் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதை ஏற்ற நீதிபதிகள், தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டனர்.
தோனி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தான் இப்போது சென்னை ஐகோர்ட் இந்த தீர்ப்பைத் தொடுத்துள்ளது. தோனி தொடர்ந்து பிரதான மன நஷ்ட ஈடு வழக்கு தனியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.