நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பாக கேள்வி எழுப்பியதால் லோக்சபா, ராஜ்யசபாவில் 14 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் இன்று போராட்டம் நடத்தினர். லோக்சபாவிலும் ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி நீடித்ததால் இரு சபை நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்துக்குள் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியது. நாடாளுமன்ற வளாகத்துக்கும் இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் புகை பொருட்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றப் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ள இத்தாக்குதல் குறித்து பிரதமர் மோடி அல்லது மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம் தரக் கோரி லோக்சபா, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் லோக்சபா, ராஜ்யசபாவில் மொத்தம் 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ராஜ்யசபாவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். லோக்சபாவில் திமுகவின் கனிமொழி உள்ளிட்ட 14 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் இன்று போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்களும் பங்கேற்றனர். அப்போது கைகளில் பதாகைகளை ஏந்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதனிடையே இன்று காலை லோக்சபா கூடியதும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை நடவடிக்கைகள் பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. இதேபோல ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் ராஜ்யசபா நடவடிக்கைகளும் பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் எம்பி தமது எக்ஸ் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளதாவது:-
பாஸ் கொடுத்த பாஜக எம்பி அவைக்குள்ளே! பாதுகாப்பின்மைக்கு காரணம் யாரென கேட்ட நாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு அவைக்கு வெளியே! அவையில் மட்டுமல்ல.. பார்வையாளர் மாடத்திற்கோ, வராந்தாவுக்கோ கூட நாங்கள் செல்லக்கூடாது. ஆனால் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பார்வையாளர்களை இன்றும் அனுப்பிவைத்து அவைக்கு பெருமை சேர்க்கலாம். இது தான் பாஜகவின் பாராளுமன்ற மரபு. இவ்வாறு சு.வெங்கடேசன் எம்பி பதிவிட்டுள்ளார்.