கண்ணகி படத்தில் நடித்த அம்மு அபிராமி சமீபத்தில் அளித்த பேட்டியில் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் பாத்ரூம் விஷயத்தில் எல்லாம் கஞ்சத்தனம் செய்யக் கூடாது என தனது வேதனையை பதிவு செய்துள்ளார்.
பைரவா படத்தின் மூலம் அறிமுகமானவர் அம்மு அபிராமி. ராட்சசன், அசுரன் என முன்னணி நடிகர்கள் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த அம்மு அபிராமி இந்த ஆண்டு பாபா பிளாக் ஷீப் மற்றும் இன்று வெளியான கண்ணகி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கண்ணகி படத்தின் புரமோஷனுக்காக பேட்டியளித்த அம்மு அபிராமி, தனக்கு தோன்றியதை வெளிப்படையாக பேசினாலோ கேட்டாலோ திமிரான பொண்ணுன்னு தன்னை முத்திரைக் குத்தி விடுகின்றனர் என பேசியுள்ளார்.
கண்ணகி படத்தில் திருமணத்துக்காக காத்திருக்கும் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பீரியட்ஸ் ஏற்பட்ட நிலையில், கோயிலில் திருமணம் வைத்திருக்க கோயில் படியை ஏறி அவர் உள்ளே செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
பல கோடி போட்டு படம் எடுக்குறாங்க, ஆனால், நடிகைகள் பாத்ரூம் போக கூட சரியான வசதிகள் செய்யப்படுவதில்லை. சில படங்களில் பாத்ரூம் போகவும், உடை மாற்றவும் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கேன். வெளி இடங்களில் ஷூட் செய்யும் போது அட்ஜெஸ்ட் பண்ணிக்க சொல்கின்றனர். இந்த விஷயத்தை எப்படி பொறுத்துக் கொள்வது. ரெடிமேட் டாய்லெட் எல்லாம் இருக்கும் போது, அதை ஷூட்டிங் இடத்தில் வைக்க வேண்டியது அடிப்படை உரிமை தானே என ஆதங்கப்பட்டுள்ளார்.
கண்ட கண்ட இடத்துல பாத்ரூம் போய் பல முறை எனக்கு இன்ஃபெக்ஷன் ஆகிடுச்சு, முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் மட்டும் கேரவன் வைத்துக் கொள்வார்கள். ஆனால், வளரும் நடிகர்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என அனைவரும் மனிதர்கள் தானே, அனைவருக்கும் இயற்கை கடனை மறைவான மற்றும் சுகாதாரமான முறையில் கழிக்க வேண்டுமல்லவா, இந்த விஷயத்தில் எல்லாம் சிக்கனம் செய்து அப்படி யாருக்கு படம் எடுத்து வெளியிட போறீங்க என கூறியுள்ளார்.