தமிழகத்தில் ஆர்டி-பிசிஆர் சோதனைகளை அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது: மா.சுப்பிரமணியன்

தமிழகத்திலும் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக பெரிய அளவில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று ஒன்று சிங்கப்பூர் மற்றும் கேரளா போன்ற பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பரவி வருகிறது. அந்த வகையில், கேரளாவில் நேற்றைய பாதிப்பு எண்ணிக்கை 230 ஆக உயர்ந்திருக்கிறது. ஆக்டிவ் கேஸஸ் (Active cases) என்ற வகையில் நேற்று கேரளாவில், 1,104 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். ஆனால், இந்த தொற்றால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. மிதமான பாதிப்பு இருப்பதாகத்தான் கூறப்படுகிறது.

நானும் நேற்று சிங்கப்பூரில் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் நண்பர்களுடன் பேசினேன். அங்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த பாதிப்பு 3-4 நாட்கள் இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டை வலி, இருமல் வந்து பின்னர் சரியாகிவிடுவதாக கூறினார்கள். அதேநேரம், கேரளாவில் இந்த புதிய வகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தமிழகத்திலும் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக பெரிய அளவில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், தினசரி கொரோனா பாதிப்புகள் ஒற்றை இலக்க எண்ணிக்கையில்தான் இருந்து வருகின்றன. எனவே, தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதித்தவர்களின் மாதிரிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம். இரண்டு மூன்று தினங்களில் அது என்ன மாதிரியான உருமாற்றம் என்பது குறித்தும், அதனால் ஏற்படும் உடல் உபாதைகள் குறித்து தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.