நாங்க ஜெயிலை எல்லாம் ஏற்கனவே பார்த்த ஆளு: அமைச்சர் ராஜகண்ணப்பன்!

“நாங்க ஜெயிலை எல்லாம் ஏற்கனவே பார்த்த ஆளு. இதற்கெல்லாம் அஞ்சக்கூடியவர்கள் திமுக அமைச்சர்கள் கிடையாது” என அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மிகவும் சேட்டை செய்து கொண்டு இருப்பதாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆளுநரால் என்ன செய்துவிட முடியும் என்றும் அவர் கேள்வியெழுப்பி இருக்கிறார்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பூதாகரமான நிலையில், தற்போது அது உச்ச நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது. தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராதது மட்டுமின்றி, இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியதற்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. மேலும், இதுதொடர்பாக ஆளுநரும், முதல்வரும் பேச்சுவாத்தை நடத்த வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இதையடுத்து, முதல்வரை ஆலோசனை நடத்த வருமாறு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்தார். ஆனால், வெள்ள நிவாரணம் உள்ளிட்ட பல காரணங்களை காட்டி அதை முதல்வர் தள்ளி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆளுநர் – முதல்வருக்கு இடையே பனிப்போர் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ஆளுநர் ரவியை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறுகையில், “ரொம்பவும் சேட்டை பண்ணிட்டு இருக்காரு கவர்னரு. என்ன பண்ணுவாரு.. மிஞ்சி மிஞ்சி போனா ஒரு கேஸ் போடுவாங்க. நம்ம செந்தில் பாலாஜியை உள்ள வச்ச மாதிரி வைப்பாங்க. அவ்வளவு தானே. நாங்க ஜெயிலை எல்லாம் ஏற்கனவே பார்த்த ஆளு. இதற்கெல்லாம் அஞ்சக்கூடியவர்கள் திமுக அமைச்சர்கள் கிடையாது” என அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.