மக்களின் நலனையும், மருத்துவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு அக்டோபர் 11 ஆம் நாள் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள அரசு மருத்துவர்கள் எண்ணிக்கையை 1752 ஆக உயர்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவர்களை தேர்ந்தெடுப்பதற்காக 14 மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட ஆள்தேர்வு அறிவிக்கையின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர்கள் பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை. போட்டித்தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்தால், தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியிடங்களின் 70%க்கும் கூடுதலாக அதிகரித்து பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக இருந்த 1021 உதவி பொது மருத்துவர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11-ஆம் நாள் வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் மருத்துவர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான போட்டித் தேர்வுகள் கடந்த ஏப்ரல் 25&ஆம் நாள் நடத்தப்பட்டன. மொத்தம் 16,093 பேர் இத்தேர்வுகளை எழுதினர். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நினைத்திருந்தால், அடுத்த 3 மாதங்களில் முடிவுகளை அறிவித்து, தேர்வான மருத்துவர்கள் பட்டியலை வெளியிட்டிருந்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை.
1021 மருத்துவர்கள் தேர்வில் தமிழ்ப் பாடத் தகுதித் தேர்வும் நடத்தப்பட்டது. பத்தாம் வகுப்பு தரத்திலான அத்தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே மருத்துவர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்வு முடிந்து 50 நாட்கள் வரை தமிழ்ப்பாட விடைத்தாள்கள் திருத்தப்படவில்லை. ஜூன் 23 ஆம் நாள் தமிழ்ப் பாட முடிவுகள் அறிவிக்கப்பட்ட போதிலும், முதன்மை பாடத் தேர்வுக்கான முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மாறி, மாறி தொடரப்பட்ட வழக்குகள் தான் இந்த தாமதத்திற்கு காரணம் என்பதை மறுக்க முடியாது.
அரசு மருத்துவர்கள் நியமனம் தொடர்பாக ஏற்படுத்தபட்ட அனைத்து முட்டுக்கட்டைகளும் தகர்க்கப்பட்டு, இம்மாத இறுதியில் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் காலியாக இருந்த மருத்துவர் பணியிடங்களின் எண்ணிக்கை 1021-ஆக இருந்த போது, ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதன்பின், 14 மாதங்களாகி விட்ட நிலையில், காலியிடங்களின் எண்ணிக்கை 1752 ஆக அதிகரித்து விட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்ப்பட்ட பதிலில் இதை அரசு உறுதி செய்துள்ளது. 1021 மருத்துவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டால் கூட அரசு மருத்துவமனைகளில் அனைத்துக் காலியிடங்களையும் நிரப்ப முடியாது. 731 மருத்துவர் பணியிடங்கள் காலியாகவே இருக்கும். அது மக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதில் பாதிப்பை ஏற்படுத்தும். அது தடுக்கப்பட வேண்டும்.
தருமபுரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பின்தங்கிய மாவட்டங்களில் தான் அரசு மருத்துவர் பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் காலியாக உள்ளன. காலியிடங்களை நிரப்பாவிட்டால், அந்த மாவட்ட மக்கள் தான் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுவர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட மருத்துவர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு முடிவுகள் அடுத்த 3 மாதங்களில் வெளியிடப்பட்டிருந்தால், நடப்பாண்டின் தொடக்கத்திலேயே 1021 மருத்துவர்களும் நியமிக்கப்பட்டிருப்பார்கள். அதன்பின் புதிதாக உருவாக காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு, ஆள்தேர்வு தொடங்கப்பட்டு இருக்கும்.
ஆனால், அவ்வாறு செய்யபடாத நிலையில், அரசு மருத்துவமனைகளில் காலியிடங்கள் அதிகரித்ததற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். கடந்த 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐந்தாண்டுகளில் முதன் முறையாக இப்போது தான் மருத்துவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்குப் பிறகு எப்போது புதிய மருத்துவர்கள் தேர்வு நடைபெறும் என்பது தெரியவில்லை. அரசு மருத்துவமனைகளில் புதிதாக ஏற்பட்டுள்ள காலியிடங்களையும் அண்மையில் நடத்தப்பட்ட போட்டித் தேர்வின் அடிப்படையில் நிரப்புவது தான் சரியாக இருக்கும். அது தான் தமிழ்நாட்டு மக்களுக்கும், மருத்துவர்களுக்கும் பயன் அளிக்கும்.
எனவே, மக்களின் நலனையும், மருத்துவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு அக்டோபர் 11 ஆம் நாள் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள அரசு மருத்துவர்கள் எண்ணிக்கையை 1752 ஆக உயர்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.