நாடாளுமன்ற அத்துமீறலுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்: கனிமொழி

நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறலுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், இது தொடர்பாக மத்திய அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் திமுக எம்.பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக மகளிர் அணி சார்பில் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கே.கே.நகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உதவிகளை வழங்கிய கனிமொழி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்றத்துக்குள் இருவர் ஊடுருவி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினர். அதேநேரத்தில் நாடாளுமன்றத்துக்கு வெளியே இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களும்கூட பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதும், ஜனநாயகத்தின் கோயிலாகக் கருதப்படும் நாடாளுமன்றமும்கூட தாக்குதலுக்கு உள்ளாகும் என்பதும் இதில் இருந்து வெளிப்பட்டுள்ளது. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். புகை கக்கும் குப்பிகளுக்குப் பதிலாக அவர்கள் துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும்கூட கொண்டு வந்திருக்க முடியும். நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் நுழைந்து எவர் ஒருவரும் அத்துமீறலில் ஈடுபட முடியும் என்பதையே இது காட்டுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு போதுமானது அல்ல.

கடந்த 2001ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நிகழ்ந்தபோது அப்போதைய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி மக்களவையில் அதுகுறித்து அறிக்கை அளித்தார். அதேபோன்ற விளக்கத்தைத்தான் நாங்கள் தற்போது கேட்கிறோம். நடந்த சம்பவத்துக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். குறைந்தபட்சம் நடந்த சம்பவம் குறித்து விளக்கமாவது அளிக்க வேண்டும். இதை எழுப்பியதால் நாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளோம். இது எப்படி நியாயமான நடவடிக்கையாக இருக்க முடியும்?. இவ்வாறு கனிமொழி கூறினார்.