மத்திய குழுவினரின் பாராட்டு அவதூறு பேசுபவர்கள் கன்னத்தில் விழுந்த அறை: மு.க.ஸ்டாலின்

மத்திய குழுவினரின் பாராட்டு அவதூறு பேசுபவர்கள் கன்னத்தில் விழுந்த பளார் அறை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சி தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

தலைவர் கலைஞரின் அன்புள்ள உடன்பிறப்புகளுக்கு, உங்கள் ஒருவனால் எழுதப்படும் மடல். வரலாறு காணாத கனமழையை மிக்ஜாம் புயல்களின் எதிரொலியாக அல்ல.. அல்ல.. இடியொலியாக எதிர்கொண்ட சென்னையும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களும், எத்தகைய இடர் வந்தாலும் அதிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதில் அக்கறையும் பொறுப்பும் கொண்ட அரசை நடத்திவரும் காரணத்தால் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டன. அதனுடன் சென்னை மாநகரத்தின் முக்கிய பகுதிகள் பலவற்றிலும் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவேற்றப்பட்டு, மற்ற இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்தான் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ள நேரிட்டது. ஒரே நாளில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த மழையின் அளவு 40 சென்டி மீட்டருக்கு மேல் என்பதால் சென்னை கடந்த 50 ஆண்டுகளில் காணாத பேரிடரை எதிர்கொண்டது. டிசம்பர் 4 ஆம் நாள் முழுவதும் கனமழை பெய்த நிலையில், மறுநாள் (டிசம்பர் 5) அதிகாலையில் ஏறத்தாழ பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் வடிந்திருந்தது. அதற்கு காரணம், திராவிட மாடல் அரசின் மழைநீர் வடிகால் பணிகளும், மழை பெய்த நேரத்திலும் மாநகராட்சி மற்றும் அரசுத்துறை பணியாளர்களின் அயராத உழைப்பும்தான்.

2015-ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியின் தண்ணீரை முறையான முறையில் திறக்காமல், ஒரே இரவில் அளவுக்கதிமாகத் திறந்துவிட்டு உருவாக்கப்பட்ட செயற்கை வெள்ளத்தின்போது சென்னைக்குள் கூட வாகனங்கள் வரமுடியாத நிலை இருந்தது. ஆனால், மிக்ஜாம் புயல் சென்னையைக் கடந்த சில மணி நேரங்களிலேயே செங்கல்பட்டு முதல் சென்னை வரையிலான ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து சீரானது. பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் சீரான நிலைதான். அதே நேரத்தில், சென்னை புறநகரின் ஏரிகள் சூழ்ந்த பகுதிகளிலும், கடல் மட்டத்திற்கு இணையான சென்னையின் தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் வெள்ளமாகத் தேங்கியிருந்ததை அறிந்து, அங்கு உள்ள மக்களுக்கு உதவவும், அவர்களை மீட்கவும், அந்தப் பகுதியில் வெள்ளநீரை வடியச் செய்து, இயல்பு நிலை திரும்பிடவும் அரசு இயந்திரங்கள் முழுமையான அளவில் தங்கள் பணிகளை மேற்கொண்டன.

ஆட்சி வழங்கிய மக்களிடம் பொறுப்புடன் நடந்துகொள்ளும் தன்மை கொண்டது இந்த அரசு. டிவியில் பார்த்துதான் விவரம் தெரிந்துகொண்டேன் என்றோ, பங்களா வீட்டின் வாசலில் உள்ள பெரிய இரும்புக் கதவு திறக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்றோ முந்தைய ஆட்சியாளர்களின் நிலைமை இனி இல்லை. மக்கள் பிரதிநிதிகளை மக்கள் அணுகமுடியும், கேள்வி கேட்க முடியும், நிவாரணம் பெற முடியும் என்ற ஜனநாயகப் பூர்வமான அரசு செயல்பட்டு வருகிறது. மிக்ஜாம் புயலின் பாதிப்புகளைப் பார்வையிட்ட ஒன்றிய குழுவினரும், அரசியல் மாச்சரியமின்றி திராவிட மாடல் அரசின் பணிகளைப் பாராட்டி உள்ளனர். இது நம் உண்மையான உழைப்புக்கும் அக்கறையான செயல்பாடுகளுக்கான சான்றிதழ் மட்டுமல்ல, அவமதிப்பு பேசி அரசியல் செய்ய நினைப்பவர்களின் கன்னத்தில் விழுந்த பளார் அறை என்றால் மிகை அல்ல.

பேரிடரில் அரசியல் செய்யும் குணம் படைத்தவர்களை பற்றிக் கவலைப்படாமல், மக்கள் நலன் காக்க சிந்தித்து செயல்படும் அரசு, 6000 ரூபாய் நிவாரணம் அறிவித்து, அதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளது. பேரிடரில் உயிரிழந்தவர்களுக்குரிய நிவாரணம், மீனவர்களுக்குரிய வாழ்வாதாரம் உட்பட அனைத்திலும் கவனம் செலுத்தி அவற்றுக்கான தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.