எண்ணூர் பகுதியில் எண்ணெய் கழிவு பாதிப்பு: கமல்ஹாசன் ஆய்வு!

எண்ணூர் காட்டுக்குப்பம் பகுதியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், படகு மூலம் சென்று ஆய்வுசெய்தார்.

மிக்ஜாம் புயலின் போது மழை வெள்ளம் ஏற்பட்ட நிலையில், எண்ணூர் சி.பி.சி.எல் ஆலையிலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் வடசென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக தாழ்வான பகுதிகளில் படிந்தது. வெள்ள நீர் தேங்கிய குடியிருப்பு பகுதிகளில் மழைநீரோடு கச்சா எண்ணெய்யும் கலந்து, வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். வெளியேறிய கச்சா எண்ணெய்க் கழிவு, கொசஸ்தலை ஆற்றில் கலந்து கடலில் பரவியுள்ளது. இதனால் மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் பாழாகி தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். கடற்படை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்ததில் கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரத்திலிருந்து காசிமேடு துறைமுகம் வரை 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு கச்சா எண்ணெய் பரவி இருப்பது தெரியவந்தது.

எண்ணெய் கழிவு, வெள்ள நீரிலும், கடலிலும் கலந்தது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. மேலும், எண்ணெய் கழிவுகளை விரைவாக அகற்ற தமிழக அரசுக்கும், சிபிசிஎல் நிறுவனத்துக்கும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியது. அதன்படி, சென்னை எண்ணூர் துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 276 பீப்பாய்களில் 48.6 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் தமிழக அரசுடன் தற்போது மும்பையைச் சேர்ந்த சீ கேர் மரைன் சர்வீசஸ் என்ற நிறுவனமும் கைகோர்த்து, எண்ணெய் கழிவை அகற்றி வருகிறது. இதுவரை சுமார் 276 பீப்பாய்களில் 48.6 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. எண்ணூர் குப்பம், நெட்டு குப்பம், தாளான் குப்பம் ஆகிய கிராமங்களில் ஜேசிபி மற்றும் டிப்பர் லாரிகள் மூலம் எண்ணெய் கழிவை அகற்றும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 482 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று காலை, எண்ணூர் காட்டுக்குப்பம் முகத்துவார பகுதியில் எண்ணெய் கழிவுகள் அகற்றப்படும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஃபைபர் படகில் சென்று எண்ணெய் கழிவு பாதிப்புகளைப் பார்வையிட்டார் கமல்ஹாசன். அப்பகுதி மக்களிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் கூறியதாவது:-

இந்த இடத்துக்கு நான் பலமுறை வந்துள்ளேன். கடந்த காலத்தைவிட பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. நீதிமன்ற உத்தரவின்படி இன்றைக்குள் எண்ணெய் கழிவு அகற்றுவது போல் ஒரு அறிகுறியும் இங்கு இல்லை. எண்ணெய் கழிவு அகற்றுவதில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. எண்ணெய் கழிவு விவகாரத்தில் ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி பழி போட்டு வருகின்றனர். எண்ணெய் கழிவு பாதிப்பு பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை தேவை. கடுமையான சட்ட நடவடிக்கை இருந்தால் தான் அச்சம் ஏற்படும். இது மீனவர்களின் பூமி. இவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.