நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி கதவுகள் பாஜகவுக்கு மூடிவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்ற 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு பாஜகவுடன் அதிமுக தரப்பு நெருக்கம் காட்டி வந்தது. 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணியும் அமைத்திருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணா குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது சர்ச்சையான நிலையில், அதனை முன்வைத்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்கவில்லை என்ற பேச்சு உள்ள நிலையில், கூட்டணியில் இருந்து விலகிய பிறகு சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைத்து எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. எனினும் பாஜக மற்றும் அதிமுக இடையே ரகசிய உறவு இருப்பதாகவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணிதான் அமையும் என திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை பாரீசில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தெரிவித்துவிட்டீர்கள்.. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் இடம் பெறுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “கூட்டணிக்கு நாங்கள் யாரையும் அழைக்க தேவையில்லை. 40 தொகுதிகளிலும் அதிமுகதான் வெற்றிபெறப் போகிறது. பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என தெளிவுபடுத்தி விட்டோம். பாஜகவுக்கு கூட்டணிக்கான கதவு மூடிவிட்டது, இனி திறக்காது. ஆனால், காங்கிரஸ் அதிமுகவுக்கு எதிரியில்லை. காங்கிரஸ் உள்பட அனைவருக்கும் எங்கள் கூட்டணி கதவுகள் திறந்தே உள்ளது” என்று தெரிவித்தார்.
2015ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வெள்ளம் பாதிப்பின் போது மக்களுக்கு சிரமம் ஏற்படக்கூடாது என்பதற்காக வங்கிகளில் நிவாரணத் தொகையை டெபாசிட் செய்தோம். இப்போது, டோக்கன்களை நியாய விலை கடைகள் ஊழியர்களை விட கட்சிக்காரர்கள் தான் கொடுக்கிறார்கள். திமுக கட்சிக்காரர்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று கூட டோக்கன்களை விநியோகம் செய்யவில்லை. 6000 ரூபாய் வாங்குவதற்கு மக்களை சிரமப்படுத்துகிறார்கள். நிவாரணத் தொகை வழங்குவதை காரணம் காட்டி சில நியாய விலை கடைகள் திறக்காமல் உள்ளது” என்று குற்றம்சாட்டினார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் பல ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், தற்போது இந்தியா கூட்டணியின் தவிர்க்க முடியாத சக்திகளாக இரு கட்சிகளும் விளங்கி வருகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் தங்களுக்கு எதிரியில்லை என்றும், கூட்டணிக்கான கதவுகள் திறந்துள்ளதாகவும் ஜெயக்குமார் பேசியுள்ளது விவாதமாகியுள்ளது.