“மத்திய அரசு நாங்கள் கேட்ட நிதியை கொடுத்திருந்தால் மிக்ஜாம் புயல் நிவாரணமாக ரூ.6000 என்ன.. ரூ.10000, ரூ.20000 கூட முதல்வர் ஸ்டாலின் கொடுத்திருப்பார்” என திமுக எம்.பி. கனிமொழி கூறினார்.
மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளனர். லட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்திருக்கிறார்கள். இந்த சூழலில், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக தலா ரூ.6000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்காக பயனாளிகளுக்கு ரேஷன் கடைகளில் டோக்கன்கள் வழங்கப்பட்டு நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், வருமான வரி செலுத்தாதவர்களுக்கு மட்டுமே இந்த நிவாரணத் தொகை வழங்கப்படுவாதலும், தகுதியுள்ள பயனாளிகள் பலருக்கு நிவாரணத் தொகை கிடைக்காததாலும் பெரும்பாலான பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, இந்த நிவாரணத் தொகை வழங்கப்படுவது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “நாடாளுமன்றத் தேர்தலுக்காக தான் இந்த நிவாரணத் தொகையை திமுக அரசு வழங்குவதாக சீமான் கூறுகிறாரே..” என நிருபர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்து கனிமொழி கூறியதாவது:-
அதாவது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இதுபோன்ற ஒரு மழையும், புயலும் வர வேண்டும் என திமுக ஏதாவது முயற்சி மேற்கொண்டதா? இயற்கை பேரிடர் எப்போது வரும் யாராலும் கணிக்க முடியாது. அப்படி தான் இந்த மிக்ஜாம் புயலும் வந்தது. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக இந்த நிவாரணத் தொகையை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கும் தேர்தலுக்கும் எப்படி முடிச்சு போட முடியும்? அதுமட்டுமல்ல.. மத்திய அரசு நாங்கள் கேட்ட நிதியை கொடுத்திருந்தால் 6000 ரூபாய் என்ன.. 10 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய் கூட கொடுத்திருப்பார். இவ்வாறு கனிமொழி கூறினார்.