தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்துக் கொண்ட பின்னர் திருமண வாழ்க்கையில் மூழ்கிய நிலையில், நடிப்புக்கு பெரிய பிரேக் போட்டார். ஜோதிகாவை நடிக்கக் கூடாது என சிவகுமார் தான் சொன்னார் என்றும் ஜோதிகாவும் சூர்யாவும் மும்பைக்கு குடியேறவும் அவர் தான் காரணம் என்றும் ஏகப்பட்ட வதந்திகள் வெளியாகின.
இந்நிலையில், அதற்கு ஜோதிகாவே சரியான விளக்கத்தை கொடுத்திருக்கிறார். கோபிநாத் எடுத்த பேட்டியில் ஜோதிகா வெளிப்படையாக பேசியுள்ளார். 15 வயதில் சினிமாவில் நடிக்க வந்த ஜோதிகாவுக்கும் இப்போ இருக்குற ஜோதிகாவுக்கும் நிறைய மாற்றம் இருக்கு, 10 வருஷத்துக்கு முன்பு இருந்ததை விட 5 வருஷத்துக்கு முன்பு இருந்ததை விட போன வருஷம் இருந்ததை விட இந்த வருஷம் ரொம்பவே மாறிவிட்டேன் எனக் கூறினார்.
வாலி படத்தில் சிம்ரன் ரோலில் நடிக்க முதலில் எஸ்.ஜே. சூர்யா என்னைத் தான் அணுகினார். ஆனால், அப்போது இந்தி படத்தில் கமிட்டான நிலையில், முடியாத சொல்லி விட்டேன். அதன் பின்னர் மீண்டும் ஒரு சின்ன ரோல் இருக்கு வரீங்களான்னு கேட்டார். அதற்கு சம்மதம் தெரிவித்து தான் அந்த ரோலில் நடித்தேன் என்றார்.
சினிமாவில் நடிக்கக் கூடாது என மாமா சிவகுமார் உங்களை தடுத்தாரா என்கிற கேள்வியை நாசுக்காக கோபிநாத் கேட்க, இந்த விஷயத்தை நான் க்ளியர் பண்ணியே ஆகணும் என கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காமல் பதில் அளித்த ஜோதிகா, அந்த வீட்டில் தனக்கு ரொம்ப சப்போர்ட்டாக இருந்ததே என் அப்பா சிவகுமார் தான் என பதில் அளித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஷூட்டிங்கின் போது குடும்பம், குழந்தைகள் என அனைத்தையும் மறந்து விட்டு வேலை இடத்தில் மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டும் என்றும் மம்மூட்டியுடன் நடித்த காதல் படத்தை பிரத்யேகமாக தனது நண்பர்களுக்கு போட்டுக் காட்டி ரசித்துப் பார்த்து பாராட்டினார் என்றார்.
திருமணத்துக்கு பிறகு 15 ஆண்டுகள் சென்னையில் தான் இருந்தேன். திருமணத்துக்கு பிறகு பெண்கள் பிறந்த வீட்டை மறந்து விட வேண்டும் என்கிற எழுதப்படாத ரூல்ஸ் இங்கே இருக்கிறது. கோவிட் நேரத்தில் என் பெற்றோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அடிக்கடி மும்பைக்கு விமானத்தின் மூலம் பறக்கவும் முடியவில்லை. அதனால், சூர்யாவிடம் சொன்னதும் அவரும் ஓகே சொல்லி விட்டு மும்பையில் குடியேற சம்மதித்தார் என்றார். அதற்காக வீட்டில் எந்த பிரச்சனையும் நடக்கவில்லை என்றும் பண்டிகை நாட்கள் என்றால் ஒன்றாக கூடி சந்தோஷமாக கொண்டாடி வருகிறோம் என்றும் ஜோதிகா ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும், இது தற்காலிகமானது தான் என்றும் மீண்டும் சென்னைக்கு வந்து விடுவேன் என்றும் கூறியுள்ளார்.