மீட்பு பணிகளே செய்ய முடியல.. அந்த அளவு கஷ்டமான நிலை: கனிமொழி

வெள்ளம் பாதித்த பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மீட்பு பணிகள் சவாலாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரண பொருட்கள், உணவு பொருட்களை கூட கொண்டு செல்ல முடியாத சூழல் நிலவுவதாகவும் கனிமொழி எம்பி தெரிவித்தார்.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன் தினம் அதிகாலை முதல் பெருமழை கொட்டி தீர்த்தது. இந்த பேய்மழையால் 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன. அதிலும், நெல்லை, தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு மிகக் கடுமையாக உள்ளது. மீட்பு பணியில் உள்ளூர் அதிகாரிகளுடன் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். வெள்ள பாதிப்பு மிகக் கடுமையாக உள்ளதால் மீட்பு பணிகளே சவாலாக உள்ளதாக தூத்துக்குடி எம்பி கனிமொழி கூறியுள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி எம்பி கனிமொழி கூறியதாவது:-

நிவாரண பணிகள், மீட்பு பணிகள் எப்படி நடக்கிறது என்பதை முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இங்கே இருக்கின்ற அமைச்சர்களும், அதிகாரிகளும் மீட்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அதேபோல் மற்ற அமைச்சர்களும் வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக வந்துள்ளனர். அவர்களை முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார். இரவு அவர்கள் வந்துவிடுவார்கள். மழை இதுவரை இல்லாத.. வரலாறு காணாத மழையை தூத்துக்குடி பெற்றுள்ளது. காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 90 செமீ அளவு மழை பெய்திருக்கிறது. இதேபோல் மழையையே பார்க்காத இடத்தில்கூட இந்த முறை வெள்ளம் ஏற்படக்கூடிய வகையில் மிக கனமழை பெய்துள்ளது. ஏரிகளும், குளங்களும் உடையக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு ஒருலட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதனால் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கக்கூடிய நிலையும் உருவாகியது. குறிப்பாக தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திக்குளம், ஸ்ரீவைகுண்டம் என எல்லா பகுதிகளிலுமே பாதிப்பு இருக்கிறது. தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் படகுகளில் சென்று நிவாரண பணிகள், மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. தண்ணீர் அடித்துக்கொண்டு செல்வதால் படகுகளில் செல்ல முடியாத நிலை இருக்கிறது. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கரண்ட் இல்லாததால் யாருமே அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது. அங்கு யாரையும் தொடர்பு கொள்ள முடியாத ஒரு சூழல் இருக்கிறது. தண்ணீர் ஓட்டம் மிக மிக அதிகமாக இருப்பதாலும், தண்ணீர் ஓட்டத்தின் வேகத்தால் மீட்புபணிகளை செய்ய முடியவில்லை. பல சவால்களை தாண்டி தான்: என்டிஆர்எஸ்சில் இருந்து வந்தவர்கள் கூட அங்கு தண்ணீர் ஓட்டம் அதிகமாக இருப்பதனால் எளிதாக அங்கு சிக்கியுள்ள மக்களை மீட்டெடுக்க முடியாத நிலை உள்ளது.

இங்கு எல்லா இடத்திலேயும் தண்ணீர் நிற்பதால் மக்கள் உணவு சமைத்து சாப்பிடக்கூடிய நிலை சுத்தமாக இல்லை. அவர்களுக்கு உணவு கொண்டு கொடுப்பது கூட சவாலாக உள்ளது. எல்லா பகுதியிலும் தண்ணீர் நிற்க கூடிய சூழல் உள்ளது. பல சவால்களை தாண்டி தான் எந்தவொரு உதவியையும் செய்ய வேண்டியது உள்ளது. மீட்பு பணிகளை கூட பல்வேறு சவால்களை தாண்டி தான் செய்து வருகிறோம். தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் இதுவரை மழையே பெய்யாத இடங்களில் கூட தற்போது தங்கள் வீடுகளுக்குள் தண்ணீர் வந்திருந்ததை பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவ்வாறு கனிமொழி எம்பி கூறினார்.