“கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை நாளை நேரில் ஆய்வு செய்யவுள்ளேன்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக்ஜாம் புயல், கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோருவதற்கும், தற்போது தென் மாவட்டங்களில் பெய்துவரும் அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு, நிவாரண பணிகள் குறித்து எடுத்துக் கூறி பிரதமர் மோடியிடம் ஆலோசிப்பதற்கு டெல்லி சென்றுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர். அப்போது முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:-
கடந்த டிசம்பர் 4-ம் தேதி அன்று புயலும், அதன்காரணமாக கடுமையான மழையும் ஒருநாள் முழுக்க பெய்தது. அதற்கு முன்பே, தமிழக அரசால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக பெருமளவு சேதம் தடுக்கப்பட்டது. மக்கள் பேராபத்தில் இருந்து காக்கப்பட்டனர். இதனை ஒன்றிய அரசு சார்பில் சேதத்தை பார்வையிட்ட மாநில அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளது. மழை நின்றதும் உடனடியாக நிவாரண பணிகள் தொடங்கப்பட்டன. மறுநாளே போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. 98% மின் இணைப்பானது மூன்று நாட்களுக்குள் சரிசெய்யப்பட்டது. புறநகரில் ஒருசில பகுதிகள் நீங்கலாக, மற்ற பகுதிகளில் நான்கைந்து நாட்களுக்குள் இயல்பு நிலைக்கு திரும்பின. தண்ணீரில் மூழ்கியிருந்த பகுதி மக்களுக்கு தேவையான பொருட்களை கொடுத்தோம். அவர்களை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தோம். நானே பல்வேறு பகுதிகளுக்கு சென்று சோதனையிட்டேன். 20 அமைச்சர்கள், 50 ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், 20000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் களப்பணியில் ஈடுபட்டனர். வெளிமாவட்டங்களில் இருந்தும் ஊழியர்கள் அழைத்து வரப்பட்டு நிவாரண பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
புயலுக்கு முன்னும், பின்னும் அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக பாதிப்புகள் பெருமளவு குறைந்தன. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பல்வேறு இடங்களை பார்வையிட்டார். அவருடனான சந்திப்பின்போது, வெள்ள சேதங்களை சரிசெய்ய முதல்கட்டமாக ரூ.5,050 கோடி தேவை என்று வலியுறுத்தினேன். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதினேன். திமுக எம்பிக்கள் மூலமாக பிரதமரிடம் நேரடியாக வழங்கப்பட்டது. ஒன்றிய அரசு சார்பில் வழக்கமாக இந்த ஆண்டு வழங்க வேண்டிய ரூ.450 கோடி வழங்கியுள்ளது. இது பெரும் பேரிடர் என்பதால் கூடுதல் நிதியை கோரியுள்ளோம். ஒன்றிய அரசு சார்பில் குழு தமிழகத்தில் 3 நாட்கள் தங்கி பல்வேறு இடங்களை பார்வையிட்டது. முழுமையான சேதங்களை கணக்கிட்டு தற்காலிக நிவாரணத் தொகையாக ரூ.7,033 கோடியும், நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் பணிகளை மேற்கொள்ள ரூ.12,059 கோடியும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். ஒன்றிய அரசு நிதி வரட்டும் என்று காத்திருக்காமல் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்ட மக்களுக்கான இலப்பீடு உடனடியாக தமிழக அரசு அறிவித்தது. ரூ.6000 நிவாரண தொகையாக வழங்கப்படுகிறது.
ஒன்றிய அரசின் நிதியை முழுமையாக பெற்றால் தான் முழுமையான நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியும். எனவே பிரதமரை சந்தித்து கோரிக்கை வைக்கலாம் என்று யோசித்து கொண்டிருந்த நிலையில், கடந்த இரு நாட்களாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடுமையான மழைப்பொழிந்தது. இதன்காரணமாக தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 18, 19ம் தேதிகளில் அதி கனமழை இருக்கக்கூடும் என்பதை சென்னை வானிலை மையம் 17ம் தேதி அளித்தது. வானிலை மையம் குறிப்பிட்ட மழை அளவை விட பல மடங்கு அதிகமான மழைப்பொழிவு இம்மாவட்டங்களில் பொழிந்தது. இதனால் அப்பகுதிகளே வெள்ளக்காடானது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒருநாளில் கொட்டித் தீர்த்தது. வானிலை மையத்தின் எச்சரிக்கை சற்றே தாமதமாக கிடைத்தாலும், அளித்த தகவலை விட அதிகமான மழைப்பொழிவு இருந்தாலும் தமிழக அரசு முன்கூட்டியே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது.
மழைப்பொழிவு கடுமையான உடனே 8 அமைச்சர்கள், 10 ஐஏஎஸ் அதிகாரிகள் மீட்புப்பணிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் மீட்புப்படைகள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 12,653 பேர் மீட்கப்பட்டு 141 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதியில் உள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பெருமழையிலும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும், மீட்புப்பணிகளையும் நானும், தலைமைச்செயலாளரும் மாவட்ட ஆட்சியர்களுடன் தொடர்புகொண்டு கண்காணித்து வருகிறோம்.
4 மாவட்டங்களுக்கு இன்றும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசை பொறுத்தவரை சென்னை மழை, வெள்ளத்தில் எப்படி செயல்பட்டு மக்களை காத்தோமோ, அதேபோல் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களையும் காக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அரசு இயந்திரம் இந்த நான்கு மாவட்டங்களில் முழுமையாக மையம் கொண்டுள்ளது. பாதிப்புகுள்ளான இந்த மாவட்ட மக்களுக்கான நிவாரணத்தையும் தமிழக அரசு செய்ததாக வேண்டும். எனவே, சென்னை பெருவெள்ளத்தில் வைக்கப்பட்ட கோரிக்கையுடன், தென்மாவட்ட வெள்ள சேதத்தையும் இணைத்து கோரிக்கை வைப்பதற்காக பிரதமரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. இன்று இரவு நேரம் ஒதுக்கியுள்ளார்கள். தமிழகத்தின் கோரிக்கைகளை முழுமையாக பிரதமரிடம் நேரடியாக நானே வழங்கவுள்ளேன்.
இந்த நான்கு மாவட்டங்களில் வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு அவர்களின் வாழ்வாதாரங்களை திரும்ப உருவாக்க, உடனடி நிவாரணமாக தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து உதவி செய்திட பிரதமரிடம் கோரிக்கை வைக்கவுள்ளேன். அடுத்தடுத்து இரண்டு பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்துள்ள நிலையில், இவற்றை எதிர்கொள்ள தேவையான அனைத்தும் ஒன்றிய அரசு வழங்குமாறு பிரதமரிடம் வலியுறுத்த இருக்கிறேன். இன்று இரவு பிரதமரை சந்தித்து வெள்ள பாதிப்பு நிலவரங்களை தெரிவித்துவிட்டு நாளை நான் தூத்துக்குடி, நெல்லை பகுதிகளுக்கு செல்லவுள்ளேன். கடந்த காலங்களில் கிடைக்க வேண்டிய நிவாரண நிதிகளும் கிடைக்கும் நம்பிக்கையில் தான் பிரதமரை சந்திக்கவுள்ளேன். தென் மாவட்டங்களில் 60 ஆண்டுகளாக இல்லாத மழை பெய்துள்ளது. எதிர்பாராதது இது. இவ்வாறு அவர் கூறினார்.