ஒரு போலியான சித்தாந்தம் சீட்டுக் கட்டு போல சரிந்து விழுந்து கொண்டிருக்கிறது: அண்ணாமலை!

ஒரு போலியான சித்தாந்தம் சீட்டுக் கட்டு போல சரிந்து விழுந்து கொண்டிருக்கிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஐகோர்ட்டின் தீர்ப்பு குறித்து விமர்சித்துள்ளார் அண்னாமலை.

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியின் விடுதலையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொன்முடியும் அவரது மனைவியும் 64.90% வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது நிரூபணமாகியுள்ளது என்று நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கான தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக வரும் டிசம்பர் 21ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அண்ணாமலை தனது எக்ஸ் சமூல வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

ஊழலை மட்டுமே தனது அரசியல் பிழைப்பாகக் கொண்டு, எதிர்ப்புக் குரல்களை அதிகார பலத்தின் மூலம் அடக்கிய ஒரு போலியான சித்தாந்தம், இன்று சீட்டுக் கட்டு போல சரிந்து விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே, இலாகா இல்லாத திமுக அமைச்சர் ஒருவர், ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ளார். தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடியோ, ஊழல் குற்றச்சாட்டில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார். தென் தமிழகத்தில், மக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இந்த துயரமான வேளையில், தமிழக முதல்வரோ, ஊழல்வாதிகள் மற்றும் குடும்ப அரசியல்வாதிகளின், இந்தி கூட்டணி நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லிக்குச் சென்றிருக்கிறார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.