காய்கறி ஏற்றிச் செல்லும் வாகனத்தில் கர்ப்பிணியுடன் திமுக எம்பி கனிமொழி!

தூத்துக்குடி எம்பியான கனிமொழி ஜெர்கின் அணிந்து கொண்டு காய்கறி ஏற்றிச் செல்லும் வாகனத்தில் கர்ப்பிணியுடன் திமுக எம்பி கனிமொழி செல்லும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்ததால் வெள்ளம் சூழ்ந்தது. ஒவ்வொரு பகுதியில் கழுத்தளவு வெள்ளத்தால் மக்கள் தத்தளித்தனர். மீட்பு படையினரால் கூட செல்ல முடியாத அளவுக்கு ஆற்று நீர் ஆர்ப்பரித்து பாய்ந்தது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாகவே காட்சியளித்தது. புயல் வந்தால் கூட இத்தனை வெள்ளம் வந்திருக்காது. அந்தளவுக்கு பெரும் வெள்ளத்தை இந்த காற்று சுழற்சி கொடுத்துவிட்டது. தூத்துக்குடியில் தேசிய நெடுஞ்சாலைகளில் கூட வெள்ள நீர் ஆக்ரோஷத்துடன் சென்று கொண்டிருந்தது. கன ரக வாகனங்களால் கூட அந்த பகுதியில் இயக்க முடியாத அளவுக்கு நீரின் வேகம் இருந்தது. இதை அடுத்து தூத்துக்குடியில் பேரிடர் மீட்பு படையினர் மூலம் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. பலர் பாதுகாப்பான இடங்களுக்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் பல கிராமங்களில் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில் தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி களத்தில் இறங்கியுள்ளார். அவர் கடந்த 3 நாட்களாக களத்தில் தூக்கமில்லாமல் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் மேற்கொள்ளப் பட்டு வரும் மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கியும் அவர்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்து வருகிறார். துாத்துக்குடி மாவட்டத்தின் ஏரல், ஸ்ரீவைக்குண்டம் ஆகிய பகுதிகள் முழுமையாக மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ளன, இப்பகுதி மக்களை மீட்க துாத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, ரிசவ் படையினருடன் சென்றுள்ளார். ஸ்ரீவைகுண்டத்துக்கு செல்லும் வழியில் உள்ள சிறுத்தாடு ஊராட்சியில் மேற்கொள்ளப் பட்டுவரும் மீட்பு பணிகளை கனிமொழி கருணாநிதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கனிமொழி கருணாநிதி கொடுத்துள்ள உதவி எண்ணிற்கு கர்ப்பிணி ஒருவர் கால் செய்து உதவி கேட்டுள்ளார். அதில் தன்னை வெள்ளம் சூழ்ந்த வீட்டிலிருந்து மீட்டு மருத்துவமனை சேர்க்க வேண்டும் என்று கேட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி புஷ்பா நகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று கர்ப்பிணியை மீட்டு காய்கறி ஏற்றிச் செல்லும் வாகனத்தில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். கர்ப்பிணியை வாகனத்தில் ஏற்ற உதவி செய்த கனிமொழி, அவரும் அதே வாகனத்தில் மருத்துவமனை வரை உடன் சென்றார். அது போல் கனிமொழி முழங்கால் அளவு தண்ணீரில் நின்று ஆய்வு செய்துள்ளார். இந்திய கடலோர படையினருக்கும் அவர் சில ஆலோசனைகளையும் வழங்கினார்.