வெள்ளம் சூழ்ந்ததால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய பயணிகள் அனைவரும் 3 நாள் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். பயணிகள் அனைவரும் சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர்.
கடந்த 17 ஆம் தேதி தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் மட்டும் 95 செ.மீட்டர் மழை பெய்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தென் மாவட்டங்களில் பெய்த இந்த பெருமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இப்போதும் கூட பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி தனித்தீவு போல காட்சி அளிக்கின்றன. கனமழையால் சாலைகள் அடித்து செல்லப்பட்டன. ரயில் தண்டவாளங்களும் தப்பவில்லை. இதற்கிடையே, ஸ்ரீவைகுண்டம் – செய்துங்கநல்லூர் ரயில் பாதையில் கனமழையால் திடீர் பாதிப்பு ஏற்பட்டதால், கடந்த 17-ந் தேதி இரவு 8.25 மணிக்கு சென்னைக்கு புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் 33 கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இரவு 09.19 மணிக்கு நிறுத்தப்பட்டது.
இந்த ரெயிலில் சுமார் 800 பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். ரயில் நிலையம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்ததால் பயணிகள் வெளியேற முடியாமல் வெள்ளத்தில் சிக்கினர். இதையடுத்து, அதிகாலையில் அரசு அதிகாரிகள் உதவியுடன் 300 பயணிகள் மீட்கப்பட்டு 4 பேருந்துகள் மற்றும் 2 வேன்கள் மூலம் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால், அதன்பிறகு சாலையில் உடைப்பு ஏற்பட்டதால் பயணிகளை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. ரயில் பயணிகள் 500 பேர் தவித்துக் கொண்டு இருந்தனர். இதைத் தொடர்ந்து ரயிலில் தவித்துக் கொண்டிருந்த பயணிகளை மீட்பதற்காக நேற்று காலை தேசிய பேரிடர் மீட்புக் குழுவை சேர்ந்த 15 பேர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு போலீசார் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தை சென்றடைந்தனர். தேசிய பேரிடர் மீட்பு குழு ஹெலிகாப்டர் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் உட்பட 3 ஹெலிகாப்டர்களில் ரயிலில் இருந்த பயணிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
பிறகு மதியம் 1 மணி அளவில் ரயிலில் இருந்த பயணிகளை பத்திரமாக வெளியேற்றும் பணிகள் தொடங்கப்பட்டது. ரயிலில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் சுமார் ஒரு அடி அளவுக்கு தேங்கி இருந்த தண்ணீரில் நடந்து சென்றனர். பின்னர் 3 கி.மீட்டர் தொலைவில் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பேருந்துகள் மூலம் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்துக்கு பயணிகள் அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து 18 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடந்த 3 நாட்களாக திகிலில் உறைந்து இருந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டபடி டாடா காட்டியபடி சென்னைக்கு தங்கள் பயணத்தை தொடந்தனர்.